தாங்கள் நடத்தி வந்த இரவு கேளிக்கை விடுதியில் பணியாற்றிய மூன்று பெண் ஊழியர்களின் உழைப்பைச் சுரண்டி, அவர்களைத் தவறாகப் பயன்படுத்திய குற்றங் களுக்காக ஓர் இந்தியத் தம்ப திக்கு ஐந்து ஆண்டுகள், ஆறு மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மல்கர் சாவ்லாராம் ஆனந்த், 51 - பிரியங்கா பட்டாச்சார்யா ராஜேஷ், 31 என்ற இருவருக்கும் தலா $7,500 அபராதமும் விதிக்கப்பட்டது.
அத்துடன் சம்பளம் தராததன் காரணத்தால் மூன்று ஊழியர்களில் ஒருவருக்கு இழப்பீடாக $4,878.31 தர மல்கருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஆள் கடத்தல் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிங்கப்பூரில் ஊழியர் களைக் கடத்தியதற்காக தண்டனை விதிக்கப்பட்டுள்ள முதல் சம்பவம் இது.
பங்ளாதேஷைச் சேர்ந்த மூன்று பெண் ஊழியர்கள், இரவு கேளிக்கை விடுதியில் நடனம் ஆடுவதற்காக மல்கரால் வேலையில் சேர்க்கப்பட்டனர்.
அவர்கள் மூவரும் மல்கர்-பிரியங்கா தம்பதியுடன் ஒரே வீட்டில் வசித்து வந்ததாகக் கூறப்பட்டது.
ஆனால் அவர்களைத் தனியாக வீட்டை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை.
அத்துடன் ஊழியர்களின் கடப்பிதழ்கள், வேலை அனுமதிச் சீட்டுகள், கைபேசிகள் ஆகியவற்றைத் தம்பதி பறித்து வைத்துக்கொண்டதாகவும் கூறப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
தம்பதி பல வழிகளிலும் தங்களின் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தித் தங்களின் ஊழியர்களைப் பாடாய்ப்படுத்தியதுடன் மூன்று ஊழியர்களில் ஒருவரைப் பாலியல் சேவை வழங்கவும் வற் புறுத்தியதாகக் கூறப்பட்டது.
அவ்வாறு பாலியல் சேவை வழங்க முடியாது என்றும் மறுபடியும் தான் பங்ளாதேஷுக்குத் திரும்ப வேண்டும் என்றும் கூறிய ஊழியரை 400,000 பங்ளாதேஷ் டக்கா (S$6,530) கட்ட வேண்டும் என பிரியங்கா கூறியதாக பாதிக்கப்பட்ட பெண் ஊழியர் சாட்சியம் வழங்கினார்.
கிடைக்கும் வருமானத்தில் பாதித் தொகையை அந்தப் பெண் தன் குடும்பத்திற்கு அனுப்பி வைக்கலாம் என்று கூறி பலமுறை பாலியல் சேவை வழங்க ஆசை காட்டிய பிரியங்கா, ஒவ்வொரு முறையும் ஊழியர் கொண்டு வந்த பணத்தையும் பொருட்களையும் பறித்துக்கொண்டதாக கூறப்பட்டது.
ஒரு நாளைக்கு இவ்வளவு வருமானம் ஈட்டவேண்டும் என்ற வரம்பும் நிர்ணயிக்கப்பட்டது.
அப்படி, அந்த இலக்கை எட்ட முடியாத நாட்களில் அவர்களது சம்பளம் குறைக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது.
ஐந்து மாதங்கள் வேலை செய்த பின், பாலியல் சேவை வழங்கிய பெண் ஊழியர், இரவு விடுதியிலிருந்து தப்பித்து ஓடிவிட்டார்.
அதைத் தொடர்ந்து தம்பதியின் இன்னோர் இரவு கேளிக்கை விடுதியில் வேலை செய்த மற்ற இரு பெண்களும் வேலை செய்வதை நிறுத்திக்கொண்டனர்.
இவ்வாறு பாதிக்கப்பட்ட பெண் ஊழியர்களின் அன்றாடச் செயல்கள், நடமாட்டம் ஆகியவை முழுக்க முழுக்க தம்பதியினரால் கட்டுப்படுத்தப்பட்டதாக மாவட்ட நீதிபதி சைஃபுதீன் சருவான் தண்டனை விதிப்பின்போது சுட்டினார்.
தம்பதியர் தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்யவுள்ளதாக தற்காப்பு வழக்கறிஞர் ஜெயகுமார் நாயுடு இன்று (பிப்ரவரி 11) கூறினார்.
#தமிழ்முரசு #இந்தியத்தம்பதி

