பொருளியலை தூக்கி நிறுத்த பட்ஜெட்டில் சலுகை திட்டங்கள்

பொருளியலை தூக்கி நிறுத்த பட்ஜெட்டில் சலுகை திட்டங்கள்

2 mins read

கொரோனா கிருமி பரவல் காரணமாக சிங்கப்பூரின் பொருளியல் பாதிக்கப்பட்டுள்ளதால் அடுத்த வாரம் அறிவிக்கப்படவுள்ள வரவு செலவுத் திட்டத்தில் பொருளியலை தூக்கி நிறுத்துவதற்கான வலுவான திட்டங்கள் இடம்பெறும் என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங் தெரிவித்தார்.

2003ஆம் ஆண்டின் 'சார்ஸ்' நெருக்கடியோடு ஒப்பிடுகையில் வர்த்தகம் சார்ந்த பொருளியலை தற்போதைய கொரோனா கிருமி வெகுவாகப் பாதித்துள்ளது.

சீனாவின் பொருளியல் முன்பு இருந்ததைவிட இன்று மிகப் பெரியது. அத்துடன் சீனப் பொருளியல் அதிக அளவில் பயனீட்டாளர், சேவைத் துறையைச் சார்ந்தது. இதன் காரணமாக சிங்கப்பூரின் பொருளியலுக்கும் மிரட்டல் ஏற்பட்டுள்ளது என்று தற்போது 'கொவிட்-19' என்று பெயர் சூட்டப்பட்ட கொரோனா கிருமி பரவலை பணிக்குழுவின் இணைத் தலைவருமான திரு லாரன்ஸ் வோங் சுட்டிக்காட்டினார்.

சிங்கப்பூரின் பொருளியல் பெரிய அளவில் பாதிக்கப்படுவதற்கு முன்பாக முன்ெனச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.

"பொருளியலில் ஏற்படும் விளைவுகள் மதிப்பிடப்பட்டு தயாராகி வருகிறோம். தகுந்த சலுகை திட்டங்கள் பட்ஜெட்டில் இடம்பெறும்," என்றார் அவர்.

ஆனால் பொருளியலைத் தூண்டும் திட்டங்கள் எந்த அளவுக்கு இருக்கும் என்பதை அவர் தெரிவிக்க மறுத்துவிட்டார்.

2003ஆம் ஆண்டின் 'சார்ஸ்' காலக்கட்டத்தின்போது 230 மில்லியன் வெள்ளிக்கும் அதிகமான 'சார்ஸ்' பொருளியல் மீட்புத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. இதனால் சிங்கப்பூரின் பொருளியல் மீட்சியடைந்தது.

சொத்து வரியில் கழிவு, குறுகிய கால நிதிப் பிரச்சினைகளை சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் சமாளிக்க உதவும் கடன் திட்டங்கள் போன்றவை 'சார்ஸ்' கால பொருளியல் மீட்புத் திட்டங்களில் இடம்பெற்றிருந்தன.

கொரோனா கிருமி பரவல் காரணமாக சிங்கப்பூரின் பயணத்துறை பலவீனமடைந்துள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

சீனாவின் பொருளியலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு உலகளவில் விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது. இத்தகைய சூழ்நிலையில் சிங்கப்பூர் மட்டும் விதிவிலக்கல்ல என்று திரு வோங் குறிப்பிட்டார்.

இவ்வாண்டின் வரவு செலவுத் திட்டம் இம்மாதம் 18ஆம் தேதி அறிவிக்கப்படவிருக்கிறது.