பயங்கரவாத செயல்களுக்கு நிதி உதவி செய்த இரண்டு பணிப்பெண்களுக்கு நேற்று சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்தோனீசியாவைச் சேர்ந்த 31 வயது டுர்மினி, 37 வயது ரெட்னோ ஹெர்னாயானி ஆகியோர் மீது பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் வெவ்வேறு வழக்குகளில் குற்றம் சுமத்தப்பட்டது. இருவரும் பயங்கரவாத அமைப்புக்கு நிதி உதவியளித்ததை ஒப்புக் கொண்டனர்.
இந்தோனீசியாவில் உள்ள ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளர் ஒருவருக்கு டுர்மினி மொத்தம் 1,216.73 வெள்ளி வழங்கியிருந்தார். அவருக்கு மூன்று ஆண்டுகள் ஒன்பது மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
ரெட்னோ, சிங்கப்பூரில் உள்ள நண்பர்களிடமிருந்து 100 வெள்ளி திரட்டி தாமும் அதில் 40 வெள்ளி சேர்த்து பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளரான ஃபிக்கிர் சூல்பிக்கர் என்பவருக்கு அனுப்பியிருந்தார். இவருக்கு ஒன்றரை ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டது.

