ரசாயனத் தொழிற்சாலையில் தீ; இந்திய ஊழியர் உட்பட இருவர் பலி

ரசாயனத் தொழிற்சாலையில் தீ; இந்திய ஊழியர் உட்பட இருவர் பலி

1 mins read
9c94e417-0ea0-4007-b998-f8e686498052
ஜூரோங் ஐலேண்டில் உள்ள ரசாயனத் தொழிற்சாலை ஒன்றில் இம்மாதம் ஏழாம் தேதி நிகழ்ந்த விபத்தில் சிக்கிய இரு ஊழியர்கள் உயிரிழந்தனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

ஜூரோங் ஐலேண்டில் உள்ள ரசாயனத் தொழிற்சாலை ஒன்றில் இம்மாதம் ஏழாம் தேதி நிகழ்ந்த விபத்தில் சிக்கிய இரு ஊழியர்கள் உயிரிழந்தனர்.

அவர்களில் ஒருவர் சிங்கப்பூரர்; மற்றவர் இந்திய நாட்டவர்.

அந்த 38 வயதான சிங்கப்பூரர், 29 வயதான இந்திய ஊழியர் ஆகியோர் உடனடியாக இங் டெங் ஃபோங் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் இருவரும் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அறுவைசிகிச்சைக்குப் பிறகு அவர்கள் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

ஜூரோங் ஐலேண்டில் உள்ள 21 சக்ரா அவென்யூவில் உள்ள அந்த தொழிற்சாலையில் ஹைட்ரோகார்பன் குழாய்ப் பாதையை சில ஊழியர்கள் சேர்ந்து சுத்தப்படுத்திக் கொண்டிருந்தபோது தீ விபத்து ஏற்பட்டது.

இந்தச் சம்பவம் குறித்து அன்றைய தினம் இரவு 11.25 மணியளவில் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

கப்பல் ஒன்றின் மேல் தளத்தில் தீப்பற்றியதாகவும் அந்தத் தொழிற்சாலையின் அவசரகால மீட்புக் குழு தீயை அணைத்ததாகவும் கூறப்பட்டது.

சம்பவ இடத்துக்கு வந்த குடிமைத் தற்காப்புப் படை, காயமடைந்த இருவரையும் மீட்கும் பணியில் ஈடுபட்டது.

உயிரிழந்த இருவரில் சிங்கப்பூரர் செலானீஸ் சிங்கப்பூர் நிறுவனத்தில் பணிபுரிந்ததாகவும், இந்திய நாட்டவர் டெக்செகோ எஞ்சினியரிங் நிறுவனத்தில் பணிபுரிந்ததாகவும் மனிதவள அமைச்சு குறிப்பிட்டது.

சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ள அமைச்சு, சுத்தப்படுத்துவது தொடர்பான பணிகளை நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளது.

#தமிழ்முரசு #வெளிநாட்டவர் மரணம் #விபத்து

குறிப்புச் சொற்கள்
ஜூரோங்விபத்துதீ