சுடச் சுடச் செய்திகள்

அதிபர்: சுகாதார ஊழியர்களை சிலர் நடத்தும் விதம் கவலை தருகிறது

சிங்கப்பூரில் சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களில் சிலர் நடத்தப்படும் விதம் தமக்குக் கவலை தருவதாக அதிபர் ஹலிமா யாக்கோப் தெரிவித்து இருக்கிறார். 

அவர்களுக்கு ஆதரவாக தோள்கொடுக்கும்படி சிங்கப்பூரர்களை அதிபர் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார். 

கிருமி மிரட்டலுக்குச் சிங்கப்பூர் ஆளாகி இருக்கும் இந்தச் சூழலில் மருத்துவர்களுக்கும் தாதியர்களுக்கும் மக்கள் தரும் ஆதரவு மேலும் சேவை வழங்க அவர்களுக்கு தார்மீக ஊக்குவிப்பைக் கொடுக்கும் என்று சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் புதன்கிழமை தெரிவித்து இருந்தார். 

அதிபரும் அமைச்சரின் அதே கருத்தைப் பிரதிபலித்தார். அன்றாட வாழ்க்கையில் அத்தகைய ஊழியர்களுடன் கலந்துறவாடும்போது அவர்களைப் பாராட்டி, அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து, அவர்கள் மீது அக்கறையுடன் நடந்துகொள்வது தனிப்பட்ட ஒவ்வொருவரையும் பொறுத்தது என்று ஃபேஸ்புக் பக்கத்தில் அதிபர் தெரிவித்து இருக்கிறார். 

கொரோனா கிருமி தலைவிரித்தாடும் இப்போதைய சூழலில் சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களைச் சிங்கப்பூரர்கள் எப்படி நடத்துகிறார்கள் என்பது அண்மைய நாட்களில் அதிக கவனத்தைப் பெற்று இருக்கிறது. 

எம்ஆர்டி நிலையங்களில் சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களை மக்கள் தவிர்த்துக் கொள்வதைக் காட்டும் பல காணொளிகள் சமூக ஊடகங்களில் இடம்பெற்று வருகின்றன.  

அவற்றைப் பார்க்கும்போது மக்களை நேரடியாகச் சந்தித்து  அவர்களுக்குச் சேவையாற்றும் சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களை நாம் நடத்தும் விதம் உண்மையிலேயே கவலை தருவதாக இருக்கிறது என்று அதிபர் குறிப்பிட்டு இருக்கிறார். 

“அந்த ஊழியர்களும் மனிதர்கள்தான். அவர்கள் அன்றாடம் மற்றவர்களின் நலனைப் பாதுகாக்கும் பணியில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு இருக்கிறார்கள். 

“தங்கள் நலன் குறித்தும் தங்கள் குடும்பத்தாரின் நலன் குறித்தும் அவர்களுக்கும் கவலை உண்டு என்பதை மறந்துவிடக்கூடாது. 

“இருந்தாலும் அவற்றை எல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டு அச்சமின்றி தொண்டூழியச் சேவையில் அவர்கள் ஈடுபட்டு இருக்கிறார்கள்,” என்பதை அதிபர் சுட்டினார்.

அண்மையில், நாடு முழுவதும் மக்களும் பல்வேறு அமைப்புகளும் சிங்கப்பூரின் தாதியர்களுக்கும் இதர சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களுக்கும் பேராதரவைத் தெரிவித்து இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon