சுடச் சுடச் செய்திகள்

புதிதாக ஒன்பது பேருக்குக் கிருமித்தொற்று; எச்சரிக்கை உயர்த்தப்படாது

சிங்கப்பூரில் இன்று மேலும் ஒன்பது பேருக்குப் புதிதாக கொவிட்-19 (கொரோனா) கிருமித் தொற்றியிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அவர்களையும் சேர்த்து கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 67ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சு இன்று (பிப்ரவரி 14) தெரிவித்தது.

புதிதாக கிருமி தொற்று கண்டவர்களில் அறுவர் ‘கிரேஸ் அசெம்பிளி ஆஃப் காட்’ தேவாலயத்துடன் தொடர்புடையவர்கள். 

இதையடுத்து, கிருமித்தொற்று அதிகம் பரவிய இடமாக அந்தத் தேவாலயம் உருவெடுத்துள்ளது. இதுவரை அந்த வழிபாட்டுத் தலத்துடன் தொடர்புடைய 13 பேரை கொரோனா கிருமி தொற்றியுள்ளது. அவர்களில் முதல் இருவருக்கு கடந்த 11ஆம் தேதி கிருமித்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

அந்த அறுவரைத் தவிர்த்து, கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள எஞ்சிய மூவரில் பொதுப் பயனீட்டுக் கழக ஊழியரும் நியூட்டன் பகுதியில் உள்ள ‘என்வைரன்மண்ட்’ கட்டடத்தில் பணிபுரிந்த நிர்வாக ஊழியரும் அடங்குவர்.

சிங்கப்பூரில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வரும் போதிலும், தற்போது ஆரஞ்சு நிறத்தில் உள்ள ‘டோர்ஸ்கோன்’ விழிப்புநிலையை சிவப்பு நிறத்திற்கு உயர்த்த திட்டம் எதுவும் இல்லை என்று இன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் கூறினார்.

ஏற்கெனவே பாதிக்கப்பட்டவர்களுடன் சிறிதும் தொடர்பில்லாமல், உள்ளூர்வாசிகளில் முதன்முதலாக கிருமித்தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து கடந்த 7ஆம் தேதி விழிப்புநிலை ஆரஞ்சு நிறத்திற்கு உயர்த்தப்பட்டது.

இதற்கிடையே, ஏற்கெனவே கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் இருவர் குணமாகி மருத்துவமனையிலிருந்து வெளியேறியுள்ளனர். 

இருப்பினும் ஏற்கெனவே கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள ஆறு பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக சுகாதார அமைச்சின் மருத்துவ சேவைகளுக்கான இயக்குநரும் இணைப் பேராசிரியருமான கெனத் மாக் தெரிவித்துள்ளார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon