சுடச் சுடச் செய்திகள்

கிருமி பரவாமல் தடுக்க அதிரடி நடவடிக்கை; ஐந்து நாள் விடுப்பு

உள்ளூரில் கிருமி தொற்றிய சம்பவங்களில் பலர் மற்றவர்களுடன் தொடர்பு கொள்வதையும் காய்ச்சல் இருந்தாலும் அவர்கள் வேலைக்குச் செல்வதையும் சுட்டிக்காட்டிய அமைச்சு, தனிப்பட்டவர்களும் முதலாளிகளும் ஐந்து நாள் விடுப்பை கட்டாயமாகப் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தியது.

“சுவாசக் கோளாறு அறிகுறிகள் உள்ள பெரும்பாலோர் ‘கொவிட்-19’ கிருமியால் பாதிக்கப் பட்டவர்கள் அல்லர். இருந்தாலும் முன்னெச்சரிக்கையுடன் செயல் படுவது நல்லது. 

இதனால் சுவாசக் கோளாறு அறிகுறிகள் இருப்பவர்கள் முன்கூட்டியே மருத்துவ சிகிச்சைகளைப் பெற்று காய்ச்சல் போகும்வரை வீட்டில் தங்கியிருக்க வேண்டும்,” என்று அமைச்சு குறிப்பிட்டது.

நோயாளிகள் உடல் நலமில்லாத சமயத்தில் வீட்டில் தங்குவதற்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும்.

சுவாசக் கோளாறு அறிகுறிகளுடன் மக்கள் பெருமளவில் கூடும் இடங்களுக்குச் செல்வது, வேலைக்கு அல்லது பள்ளிக்குச் செல்வது போன்றவை மற்றவர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும்.

ஐந்து நாட்களுக்குள் நோய் குணமாகாவிட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் மருத்துவச் சோதனைகள் நடத்த வேண்டியிருக்கும். 

இதனால் முதலில் சிகிச்சை பெற்ற மருத்துவரையே மறுபடியும் நாடுவது நல்லது என்று அமைச்சு வலியுறுத்தியது.

இதற்கிடையே 900 பொது சுகாதார ஆயத்தநிலை மருந்தகங்கள் அடங்கிய கட்டமைப்பை மீண்டும் செயல்படுத்த சுகாதார அமைச்சு முடிவு செய்துள்ளது. சுவாசக் கோளாறு அறிகுறி களால் பாதிக்கப்பட்ட சிங்கப்பூர்வாசிகளுக்கு இந்த மருந்தகங்களில் சிறப்புக் கழிவுடன் சிகிச்சை அளிக்கப்படவிருக்கிறது.

இதே அறிகுறிகள் தென்பட்டால் பலதுறை மருந்தகங்களுக்கும் செல்லலாம் என்றும் அங்கும் கழிவுகள் கிடைக்கும் என்றும் அமைச்சு கூறியது.

பொது சுகாதார ஆயத்தநிலை மருந்தகங்கள் படிப்படியாக செவ்வாய்க்கிழமையில் இருந்து செயல்படத் தொடங்கும். 

ஒவ்வொரு நோயாளியின் நோய் அறிகுறிகளைக் கண்டுபிடிக்கவும் கிருமி பரவல் ஆபத்தை மதிப்பிடவும் வழிகாட்டிகள் இங்கு பின்பற்றப்படும். 

அது மட்டுமல்லாமல் தனிப்பட்டவர்களின் உடல் நலனைப் பாதுகாக்க தேவையான சாதனங்கள் வழங்கப்படும்.

இதற்கு முன்பு இதேபோன்ற மருந்தகங்கள் தூசுமூட்டம், ‘எச்1என்1’ பரவலின்போது செயல்படுத்தப்பட்டது.

“பொதுச் சுகாதார ஆயத்தநிலை மருந்தகங்களையும் பல துறை மருந்தகங்களையும் செயல்படுத்துவதால் கிருமிப் பரவலை வலுவாகக் கண்காணித்து கட்டுப் படுத்த முடியும். 

“கிருமி பரவும் இடங்களை முன்கூட்டியே கண்டுபிடித்து மேலும் ஆபத்துகளைத் தவிர்க்க முடியும்,” என்று சுகாதார அமைச்சு நேற்று தெரிவித்தது.

ஆனால் பொதுமக்களும் தங்களுடைய பங்கை ஆற்றி, சமூகப் பொறுப்புடன் நடந்துகொண்டால் மட்டுமே இத்தகைய நடவடிக்கைகள் பயனளிக்கும் என்று அமைச்சு நினைவூட்டியது.

கைகளைச் சுத்தமாகக் கழுவி வைத்திருப்பது, சவர்க்காரம் அல்லது தண்ணீர் இல்லாத சமயத்தில் கிருமி நாசினியைப் பயன்படுத்துவது, முகத்தை தேவையில்லாமல் தொடுவதைத் தவிர்ப்பது போன்றவற்றை பொதுமக்கள் பின்பற்றலாம் என்றும் அமைச்சு தெரிவித்து உள்ளது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon