தாதியருக்கு முன்னுரிமை வழங்கும் உணவு நிலையம்

பெக் கியோ சந்தை, உணவு நிலையத்தில் உள்ள 33 உணவுக்கடைகளுக்கு மதிய உணவருந்த சீருடையில் வரும் தாதியர் வரிசையில் நிற்காமல் உடனடியாக உணவு, அதுவும் இலவசமாக வாங்கிச் சென்றுவிடலாம். தாதியருக்கான ‘மோக்கா (MoCa) கேர்ஸ் ஃபார் நர்சஸ்’ என்ற இந்த முன்னுரிமைத் திட்டத்தை மோல்மின் - கெய்ன்ஹில் தொகுதி அலுவலகம் நேற்று அறிமுகப்படுத்தியது.

“மோல்மின் - கெய்ன்ஹில் தொகுதியில் ஐந்து மருத்துவமனைகள் உள்ளன. கொவிட்-19 கிருமித்தொற்றுக்கு எதிராக அவர்கள் களைப்பறியாது போராடி வருகின்றனர். ஆதலால், இந்த அன்பர் தினத்தில், இந்த வட்டாரத்தில் வசித்து வரும், பணியாற்றி வரும் தாதியர் மீது தங்கள் அன்பை வெளிப்படுத்தும்விதமாக உணவுக்கடைக்காரர்களும் அடித்தளத் தலைவர்களும் கைகோத்துள்ளனர்,” என்று அந்தத் தொகுதி அலுவலகம் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.

அவ்வட்டாரத்தில் உள்ள டான் டோக் செங் மருத்துவமனை, தேசிய தொற்றுநோய்த் தடுப்பு நிலையம், கேகே மகளிர், சிறார் மருத்துவமனை ஆகிய மூன்றும் கிருமித்தொற்று சம்பவங்களைக் கையாண்டு வருகின்றன. இருப்பினும், தீவெங்கும் உள்ள பொது, தனியார் மருத்துவமனைகளைச் சேர்ந்த தாதியர் முழுவதும் பலன் பெறும் வகையில் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

வரும் மார்ச் 31ஆம் தேதி வரை, பெக் கியோ வர்த்தகர்கள் சங்கத்தின் ஆதரவில் தாதியருக்கு இலவச மதிய உணவு வழங்கப்படும்.

அத்துடன், ‘ஃபைவ் லோவ்ஸ்’ திட்டத்தின்கீழ் அந்த உணவு நிலையத்தில் உள்ள இரண்டு அடுமனைகளில் (பேக்கரி) ஒவ்வொரு வாரமும் அவர்கள் இலவச ரொட்டித்துண்டுகளைப் பெற்றுச் செல்லலாம். தாதியருக்கு முன்னுரிமை வழங்கும் திட்டத்தில் பங்கெடுக்கும் கடைகளில் ‘மோக்கா கேர்ஸ் ஃபார் நர்சஸ்’ என்ற வில்லை ஒட்டப்பட்டிருக்கும்.

நன்றி தெரிவித்த பிரதமர் லீ

ஒவ்வொரு நாளும், குறிப்பாக இப்போதைய கிருமித்தொற்றுச் சூழலில் தங்கள் நோயாளிகளை அக்கறையுடன் கவனித்துக்கொள்ளும்   மருத்துவர்கள், தாதியர், சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்கள் அனைவருக்கும் நேற்று அன்பர் தினத்தன்று தமது ஃபேஸ்புக் பக்கம் மூலம் பிரதமர் லீ சியன் லூங் நன்றி தெரிவித்துக்கொண்டார். 

“உங்களது அன்பான கவனிப்பும் கடப்பாடும் மிக மிக முக்கியம். இந்த நேரத்தில், நாங்கள் அனைவரும் உங்கள் பக்கம் நின்று, முழு ஆதரவையும் வழங்குகிறோம்,” என்று தமது பதிவில் பிரதமர் லீ குறிப்பிட்டுள்ளார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon