பிடோக் நார்த்: குப்பைத்தொட்டியில் குழந்தையைக் கைவிட்டதாக  26 வயது பெண் மீது குற்றச்சாட்டு

பிடோக் நார்த் ஸ்திரீட்டில்  உள்ள புளோக் எண் 543ன் குப்பைத் தொட்டியில் கடந்த மாதம் 7ஆம் தேதி கண்டுபிடிக்கப்பட்ட பச்சிளம் ஆண் சிசுவின் தாயார் என்று சந்தேகிக்கப்படும்  26 வயது பெண் மீது நீதிமன்றத்தில் இன்று (பிப்ரவரி) குற்றம்சாட்டப்பட்டது.

பன்னிரண்டு வயதுக்குட்பட்ட குழந்தையைக் கைவிட்டது, திறந்த வெளியில் பாதுகாப்பின்றி விட்டுச் சென்றது ஆகிய குற்றச்சாட்டுகள் அந்தப் பெண் மீது சுமத்தப்பட்டது.

குழந்தையை முற்றிலுமாகக் கைவிடும் நோக்கில் எந்த இடத்திலும் விட்டுச் செல்லும் குற்றத்துக்கு ஏழாண்டுகள் வரை சிறைத் தண்டனை, அபராதம் போன்றவை விதிக்கப்படும்.

மன நலக் கழகத்தில் காவலில் வைக்கப்பட்டு அந்தப் பெண்ணின் மன நலம் கண்காணிக்கப்படும். அவர் இம்மாதம் 28ஆம் தேதி நீதிமன்றத்தில் மீண்டும் முன்னிலைப்படுத்தப்படுவார்.

கைவிடப்பட்ட குழந்தையின் அடையாளம் வெளியில் தெரியக்கூடாது என்ற நோக்கில் அந்தப் பெண்ணின் பெயரை வெளியிட நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

கடந்த மாதம் 7ஆம் தேதி புளோக்கின் கீழ்த்தளத்தில் குப்பையை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த இரு துப்புரவாளர்கள் குப்பைத் தொட்டிக்குள் ஈரமான, ரத்தம் தோய்ந்த பாலிதின் பையில் சுற்றப்பட்ட நிலையில் அந்தக் குழந்தையைக் கண்டுபிடித்தனர். 

போலிஸ் கேமராக்கள், அந்தப் பகுதி குடியிருப்பாளர்கள், வர்த்தகர்கள் போன்றோர் அளித்த உள்சுற்று கண்காணிப்பு கேமராவின் காணொளிகள் ஆகியவற்றில் இருந்த படங்களைக் கொண்டு அந்தப் பெண் அடையாளங்காணப்பட்டு கடந்த வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார். 

அந்தக் குழந்தையின் தந்தையை அடையாளங்காணும் பணியில் போலிசார்  ஈடுபட்டுள்ளனர்.

#தமிழ்முரசு

Loading...
Load next