அமைச்சர் சான்: முழுமைத் தற்காப்பு மீள உதவும்

கொவிட்-19 கிருமித்தொற்று பரவி வரும் இன்றைய சூழலிலும்கூட முழுமைத் தற்காப்புப் பாடங்கள் மிக மிக முக்கியமானவை என்று வர்த்தக, தொழில் அமைச்சர் சான் சுன் சிங் தெரிவித்துள்ளார்.

மரினா பே மிதக்கும் மேடையில் நேற்று நடந்த முழுமைத் தற்காப்பு தின நிகழ்வில் பங்கேற்றுப் பேசிய அமைச்சர் சான், “நம்மில் ஒவ்வொருவரும் பங்களிக்கும் கூட்டுத் தற்காப்பே, ஒரு நாடாக நமது வலுவான தற்காப்பு,” என்றார்.

“கடந்த சில வாரங்களாக கொரோனா கிருமித்தொற்று நமக்குச் சோதனையாக இருந்து வருகிறது. இதுவரையிலும் அந்த அடையாளம் தெரியாத பகைவனுக்கு எதிரான நமது நடவடிக்கைகள் குறிப்பிடத்தக்க அளவு நல்ல பலனையே தந்துள்ளன. ஆனாலும், நாம் மெத்தனமாக இருந்துவிடக்கூடாது,” என்று திரு சான் கூறினார்.

1942ஆம் ஆண்டில் இரண்டாம் உலகப் போரின்போது சிங்கப்பூர் ஜப்பானிடம் வீழ்ந்த நாளைக் குறிப்பிடும் விதமாக முழுமைத் தற்காப்பு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. சிங்கப்பூரர்கள் தாங்களாகவே தங்கள் நாட்டைத் தற்காக்க வேண்டும் என்பதை இந்நாள் நினைவுபடுத்துகிறது.

ராணுவ, குடிமை, பொருளியல், சமூக, மனோவியல் மற்றும் மின்னிலக்கத் தற்காப்பு ஆகியவை முழுமைத் தற்காப்பின் ஆறு தூண்களாக விளங்கி வருகின்றன.

இதில் கடந்த ஆண்டு சேர்க்கப்பட்ட மின்னிலக்கத் தற்காப்பைச் செயலில் ஈடுபடுத்த வேண்டியது அவசியம் என்று சிங்கப்பூரர்களிடம் அமைச்சர் வலியுறுத்தி உள்ளார்.

இணையம் வழியாக திரும்பத் திரும்பப் பகிரப்பட்ட சில புகைப்படங்களும் காணொளிகளும் மக்கள் பேரங்காடிகளில் நீண்ட வரிசையில் நிற்கும்படியும் இன்றியமையாப் பொருட்களை வாங்கிக் குவிக்கும்படியும் செய்துவிட்டன என அவர் குறிப்பிட்டார்.

“பொய்த் தகவல்களுக்கும் வதந்திகளுக்கும் கூட்டாகப் பதிலடி தரவேண்டும். தகவல்கள் எங்கிருந்து வெளியாகின்றன என்பதைத் தனிப்பட்ட அளவிலும் கூட்டாகவும் உறுதிசெய்ய வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது,” என்றார் அவர்.

பொருளியல் தற்காப்பைப் பொறுத்தவரை, கடந்த இரு வாரங்களில் சிங்கப்பூரின் பொருட்கள் விநியோகச் சங்கிலியும் கையிருப்பும் சோதனைக்குள்ளாகின என்றும் ஆனாலும் சிங்கப்பூரின் தொலைநோக்கு உத்திகளால் அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றும் அவர் சொன்னார்.

“வரும் மாதங்களில் நமது விநியோகச் சங்கிலிகளிலும் சந்தைகளிலும் ஏற்படவிருக்கும் இடையூறுகளால் நமது பொருளியல் மீட்சித்திறன் தொடர்ந்து சோதிக்கப்படலாம். இந்த நேரத்தில் நாம் வழக்கத்தைவிட சிறப்பாகச் செயல்பட்டு நமது நிறுவனங்கள் தொடர்ந்து செழிப்புறவும் நம் ஊழியர்கள் வேலைகளைத் தக்க வைத்து, வாழ்வாதாரத்தைத் தேடிக் கொள்ளவும் உதவவேண்டும்,” என்று அவர் கேட்டுக்கொண்டார்.

முதல்நிலை சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்கள், உள்துறைக் குழுவினர் ஆகியோருடன் முகக்கவச விநியோகம், கிருமி தொற்றியோருடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறிதல் உள்ளிட்ட பணிகளில் பங்கெடுத்தோரையும் அமைச்சர் சான் பாராட்டினார்.

சமூகத் தற்காப்பைப் பொறுத்தமட்டில், சிங்கப்பூர் இளையர் படை தொண்டூழியர்கள் போன்ற சமூக அமைப்பினர் மேற்கொண்ட பல்வேறு முயற்சிகளையும் அவர் சுட்டினார்.

“எவரையும் ஒதுக்காமல் சிங்கப்பூரர்கள் ஒருவருக்கு ஒருவர் உதவ வேண்டும்,” என்றும் அவர் அறைகூவல் விடுத்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!