காரை இடித்து சேதப்படுத்தியதற்கு $1 போதும் என்றார் ஓட்டுநர்

காரை இடித்து சேதப்படுத்தியதற்கு $1 போதும் என்றார் ஓட்டுநர்

1 mins read
efd670b7-ca1f-46b5-86fe-b9d37ecc87b0
டாக்சி உரசியதில் மஞ்சள் நிற போர்ஷே காரில் கீறல் விழுந்தது. படம்: ஃபெட் வூ ஃபேஸ்புக் -

டாக்சி ஓட்டுநர் ஒருவர் எதிர்பாராத விதமாக 'போர்ஷே' கார் ஒன்றை இடித்துவிட்டார். ஆனால் அந்த ஆடம்பர கார் உரிமையாளரோ மிகப் பெருந்தன்மையுடன் நடந்துகொண்டு அந்த டாக்சி ஓட்டுநரிடமிருந்து இழப்பீடாக $1 மட்டும் பெற்றுக்கொண்டார்.

இதை இணையவாசிகள் பெரிதும் பாராட்டி வருகிறார்கள். ஃபேஸ்புக் பதிவாளரான ஃபெட் வூ என்பவர் இந்தச் சம்பவத்தைப் பற்றி பகிர்ந்துகொண்டார்.

பிப்ரவரி 13ஆம் தேதி டாக்சி ஒன்றுடன் தன்னுடைய போர்ஷே கார் ஒரு சிறு விபத்தில் சிக்கியதாகவும் அதன் விளைவாக தன்னுடைய காரில் கீறல்கள் விழுந்ததாகவும் அவர் கூறினார்.

அந்தச் சம்பவம் நிகழ்ந்ததுமே சம்பந்தப்பட்ட டாக்சி ஓட்டுநர் வேறு எதையுமே பேசாமல் தவறு தன்னுடையதுதான் என்று ஒப்புக்கொண்டு தனக்கு நேரம் சரியில்லை என்றும் குறிப்பிட்டதை போர்ஷே கார் உரிமையாளர் சுட்டினார். டாக்சி ஓட்டுநரிடமிருந்து $1ஐ மட்டும் இழப்பீடாகத் தான் பெற்றுக்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

முன்னதாக அந்த டாக்சி ஓட்டுநர், போர்ஷே கார் ஓட்டுநருக்கு $200 தொகையை மாற்றிவிட்டு இருந்தார். கொரோன கிருமி தலைவிரித்தாடும் இந்தக் காலக்கட்டத்தில் டாக்சியை ஓட்டி வருமானம் ஈட்டுவது சிரமமானதுதான். மிகவும் ஆபத்தானதுதான் என்பதை டாக்சி ஓட்டுநரிடம் எடுத்துச் சொல்லி அவர் அனுப்பிய தொகையில் $199ஐ திருப்பிக் கொடுத்துவிட்டு $1ஐ மட்டும் தான் இழப்பீடாக வைத்துக்கொண்டதாகவும் போர்ஷே ஓட்டுநர் குறிப்பிட்டு உள்ளார்.

போர்ஷே கார் ஓட்டுநரின் இந்தச் செயலை இணையத்தில் பலரும் பாராட்டி வருகின்றனர்.