‘முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளுடன் வழிபாடுகளைத் தொடர்ந்து நடத்தலாம்’

கோயில்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் வழிபாடுகளையும் சமய நிகழ்ச்சிகளையும் தொடர்ந்து நடத்தலாம் என்று பௌத்த, தாவோயிச, சீக்கிய, இந்து தலைவர் களிடம் அரசாங்கம் தெரிவித்து இருக்கிறது. 

கிருமித்தொற்றைத் தவிர்த்துக்கொள்ளும் வகையில் வழிபாட்டு இடங்களில் ஒவ்வொருவரும் சுத்தமான பழக்கவழக்கங்களைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அரசாங்கம் அறிவுரை கூறி இருக்கிறது. 

சுகாதார அமைச்சர் கான் கிம் யோங், கலாசார, சமூக இளையர் துறை அமைச்சர் கிரேஸ் ஃபூ, கல்வி அமைச்சர் ஓங் யி காங் ஆகிய மூவரும் கொரோனா கிருமி பற்றிய புதிய தகவல்களைத் தெரிவித்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பில் ஆலோசனைகளைக் கூறுவதற்காக நேற்று சமயத் தலைவர்களைச் சந்தித்தனர். 

பக்தர்களைப் பாதுகாக்கும் வகையில் ஆலயங்களில் ஏற்கெனவே பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தாங்கள் எடுத்து வருவதாக சமயத் தலைவர்களில் பலரும் அமைச்சர்களிடம் தெரிவித்தனர். இந்த விவரங்களை சுகாதார அமைச்சும் கலாசார, சமூக, இளையர் அமைச்சும் நேற்றே கூட்டறிக்கையில் தெரிவித்தன.

இந்து அறக்கட்டளை வாரியம், சிங்கப்பூர் பௌத்த கூட்டமைப்பு உள்ளிட்ட சமய அமைப்புகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஏற்கெனவே நடை முறைப்படுத்தி உள்ளன. அண்மையில் நடந்து முடிந்த தைப்பூச ஊர்வலத்தில் இத்தகைய பல ஏற்பாடு களைக் காணமுடிந்தது. 

தேசிய தேவாலயங்கள் மன்றம், பிப்ரவரி 8ஆம் தேதி தன் இணையத்தளத்தில் ஓர் அறிவிப்பை வெளியிட்டது. தொடர்ந்து பிரார்த்தனைகள் நடத்தப்படும் என்றும் உடல்நிலை சரியில்லாதவர்களுக்கு அனுமதி மறுக்கப்படும் என்பதால் அவர்கள் வீட்டிலேயே இருப்பது நலம் என்றும் அந்த மன்றம் ஆலோசனை தெரிவித்து இருந்தது. 

சிங்கப்பூரில் உள்ள தேவாலயங்கள் பல கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை நடப்புக்குக் கொண்டு வந்து கிருமித்தொற்றைத் தடுக்கும் என்றும் இந்த மன்றம் தெரிவித்து உள்ளது. 

முயிஸ் எனப்படும் சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றம், பள்ளிவாசல்களுக்குத் தொழுகைக்கு வரும்போது சொந்தமாகப் பாய்களை எடுத்து வரும்படியும் ஒருவருக்கொருவர் கைகொடுத்துக் கொள்வதைத் தவிர்த்துக்கொள்ளும்படியும் ஆலோசனை கூறி இருக்கிறது. 

கிருமி பரவுவதைத் தடுப்பதில் சமூகப் பொறுப்பைப் பற்றி நேற்று அமைச்சர்கள் எடுத்துக் கூறினார்கள். யாருக்காவது உடல்நிலை சரியில்லை என்றால் உடனடியாக மருத்துவரை அணுகவேண்டும் என வலியுறுத்தினர். 

சமய நிகழ்ச்சிகளுக்கு, வழிபாட்டு இடங்களுக்கு அவர்கள் செல்லக்கூடாது என்று அவர்கள் தெரிவித்தனர்.