வேலை செய்யும் ஒவ்வொரு சிங்கப்பூரர், நிரந்தரவாசியின் சம்பளத்தில் எட்டு விழுக்காட்டை வேலைகள் ஆதரவுத் திட்டம் மூன்று மாதங்களுக்கு ஈடுசெய்யும்.
ஒவ்வொரு மாதம் வழங்கப்படும் தொகையின் அதிகபட்ச வரம்பு $3,600 ஆகும்.
கொரோனா கிருமித்தொற்று நாட்டைப் பாதித்துள்ள வேளையில் உள்ளூர் ஊழியர்கள் தொடர்ந்து வேலையில் இருக்க உதவும் வகையில் இந்தப் புதிய திட்டத்தை துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் நேற்று அறிவித்தார்.
இவ்வாண்டு ஜூலை மாதம் 31ஆம் தேதிக்குள் எல்லா நிறுவனங்களையும் இந்த $1.3 பில்லியன் வழங்கீட்டுத் தொகை சென்றடையும். இதனால் 1.9 மில்லியனுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பலன் அடைவர்.
"வேலைகள் குறித்து நாங்கள் அதிகம் அக்கறை கொள்கிறோம். உள்ளூர் ஊழியர்கள் தங்கள் வேலைகளில் நீடிக்க நாங்கள் உதவ விரும்புகிறோம். மந்தமான காலகட்டத்தில் தங்கள் திறன்களை மேம்படுத்தி நிலைமை சரியானதும் அவற்றைப் பயன்படுத்துவதற்குத் தயாராக இருக்க ஊழியர்களுக்கு உதவ நாங்கள் விரும்புகிறோம்," என்றார் துணைப் பிரதமர் ஹெங்.
இந்தத் தற்காலிகத் திட்டத்தின்கீழ், கடந்த ஆண்டு அக்டோபரிலிருந்து டிசம்பர் வரையிலான மத்திய சேம நிதிச் சம்பளப்பட்டியலில் இருக்கும் ஒவ்வோர் உள்ளூர் ஊழியரின் மொத்த சம்பளத்தொகையில் எட்டு விழுக்காட்டை ரொக்க மானியமாக முதலாளிகள் பெறுவர். மானியத்தைப் பெற முத லாளிகள் விண்ணப்பம் செய்யத் தேவையில்லை.
மத்திய சேமநிதி பங்களிப்புத் தரவுகளைக் கொண்டு மானியத் தொகை கணக்கிடப்படும். உள்ளூர் ஊழியர்களின் சம்பள உயர்வை ஆதரிக்கும் சம்பள உதவித்தொகைத் திட்டத்தில் மேம்படுத்தப்பட்டுள்ள அம்சங்கள் குறித்து திரு ஹெங் நேற்று தெரிவித்தார்.
மாதத்துக்கு மொத்த சம்பள மாக $4,000 வரை ஈட்டும் சிங்கப்பூர் ஊழியர்கள் பெறும் சம்பள உயர்வுக்கு சம்பள உதவித்தொகைத் திட்டம் இணைந்து நிதி வழங்குகிறது.
இந்தத் திட்டத்தால் பலனடைய தகுதி பெறுவோரின் சம்பள வரம்பு $5,000க்கு உயர்த்தப்படுகிறது. கடந்த ஆண்டிலும் இவ்வாண்டிலும் வழங்கப்படும் சம்பள உயர்வுக்கு இது பொருந்தும்.
கடந்த ஆண்டுக்கான தகுதி பெறும் சம்பள உயர்வில் 15 விழுக்காட்டையும் இவ்வாண்டுக்கான தகுதி பெறும் சம்பள உயர்வில் 10 விழுக்காட்டையும் இத்திட்டம் வழங்கியது.
மேம்படுத்தப்பட்டுள்ள திட்டத்தின்கீழ் கடந்த ஆண்டுக்கான சம்பள உயர்வில் 20 விழுக்காட்டையும் இவ்வாண்டுக்கான சம்பள உயர்வில் 15 விழுக்காட்டையும் திட்டம் வழங்கும்.
$1.1 பில்லியன் பெறுமானமுள்ள திட்ட மேம்பாடுகள் ஏறத்தாழ 90,000 நிறுவனங்களைச் சென்றடையும். இதன் விளைவாக 700,000க்கும் மேற்பட்ட சிங்கப்பூரர்கள் பலனடைவர்.
திட்டத்தின்கீழ், தகுதி பெறும் ஆண்டுக்குப் பின், மார்ச் மாதத்தில் முதலாளிகளுக்கு வழங்கீடுகள் அனுப்பிவைக்கப்படும்.
மேம்படுத்தப்பட்ட புதிய திட்டத்திலிருந்து கூடுதல் சம்பள உதவித்தொகை பெறும் முதலாளிகள், இவ்வாண்டின் இரண்டாம் பாதியில் துணை வழங்கீட்டையும் பெறுவர்.
"உற்பத்தித்திறனை அதிகரிக்க முதலீடு செய்துள்ள நிறுவனங்கள் தொடர்ந்து மேம்பட வேண்டும் என்று ஊக்குவிக்கிறேன். அதன் மூலம் கிடைக்கும் லாபத்தை ஊழியர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும்," என்றார் திரு ஹெங்.

