பட்ஜெட்: வெளிநாட்டு ஊழியர்களுக்கான   ‘எஸ் பாஸ்’ ஒதுக்கீடு குறைக்கப்படும்

கட்டுமானம், துறைமுகம், பதப்படுத்தும் துறைகளில் பணியாற்றும் வெளிநாட்டு ஊழியர்களுக்கான ‘எஸ் பாஸ்’ எனப்படும் சிறப்பு வேலை அனுமதி அட்டையின் ஒதுக்கீடு குறைக்கப்படும். ‘எஸ் பாஸ்’ ஊழியர்கள் குறைந்தது மாதம் $2,400 சம்பளம் பெற வேண்டும்.

சார்ந்திருப்போர் விகித வரம்பு எனப்படும் ஒரு நிறுவனம் எத்தனை வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு வைக்க லாம் என்ற விகிதம் இரு கட்டங்களாகக் குறைக்கப்படும். முதலாவது, சார்ந்திருப்போர் விகித வரம்பு 20%லிருந்து 18%க்கு 2021ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதியிலிருந்து குறைக்கப்படும். இரண்டவதாக, 2023ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதியிலிருந்து இந்த விகிதம் 15%க்குக் குறையும்.

“இந்த திறன் சார்ந்த வேலைகளை பலதுறைத் தொழிற் கல்லூரி டிப்ளோமா வைத்திருப்பவர்கள் போன்ற உள்ளுர் மக்கள் செய்யலாம். முன்பு இத்தகைய வேலைகளைச் செய்ய உள்ளூர் மக்கள் இல்லாத காரணத்தால் வெளி நாட்டு ஊழியர்களை வேலைக்கு எடுத்தோம். இப்போது திறன் வாய்ந்த உள்ளூர் மக்கள் இருப்பதால் சார்ந்திருப் போர் விகித வரம்பு குறைக்கப்படுகிறது,” என்று நிதி அமைச்சர் ஹெங் சுவீ கியட் தெரிவித்தார்.

கடந்த இரு ஆண்டுகளாக கட்டுமானம், துறைமுகம், பதப்படுத்தும் துறைகளில் பணியாற்றும் ‘எஸ் பாஸ்’ ஊழியர் களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 3.8% என்ற விகிதத்தில் அதிகரித்து வருகிறது என்பதையும் அமைச்சர் சுட்டினார்.