அமைச்சர்: அனைத்து நோயாளிகளையும் பரிசோதிப்பது சாத்தியமல்ல

கொரோனா கிருமிக்கு எதிரான போராட்டத்தில் ஒருவருக்கு நோய் ஏற்பட்டிருப்பதைக் கண்டுபிடிக்க உடல் வெப்பநிலையைக் கண்காணிப்பதே சரியான வழி என்று சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் பேசிய ஜூரோங் நாடாளுமன்ற குழுத் தொகுதியைச் சேர்ந்த திருவாட்டி ரஹாயு மஹ்ஸாம், சிலருக்கு அறிகுறிகள் மிதமாக இருப்பதால் உடல் வெப்ப நிலையைக் கண்காணிப்பது சிறந்த வழியாக இருக்குமா என்று கேட்டார்.

இதற்குப் பதிலளித்து பேசிய அமைச்சர் கான், நோய் தொற்றியவர்களுக்கு காய்ச்சல் இல்லாத மிதமான மற்ற அறிகுறிகள் இருப்பதை ஒப்புக்கொண்டார்.

“ஒருவர் உடல் நலமில்லாமல் இருப்பதைக் கண்டுபிடிக்க உடல் வெப்பநிலை சோதனையை நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன. 

“யாருக்காவது உடல் நலம் குன்றியிருந்தால் அவர்கள் வீட்டுக்குச் சென்று ஓய்வெடுக்கவும் அறிவுறுத்தப்படுகிறது என்று அமைச்சர் குறிப்பிட்டார். உடல்நலம் பாதிக்கப்பட்டால் மருத்துவரைக் காண வேண்டும் என்று அவர் பொதுமக்களையும் கேட்டுக்கொண்டார். 

“சில நாட்களுக்கு காய்ச்சல் நீடித்தால் ஏற்கெனவே மருத்துவப் பின்னணியை குறித்து வைத்துள்ள அதே மருத்துவரிடம் செல்லுங்கள் என்று   அமைச்சர் ஆலோசனை வழங்கினார். கொரோனா கிருமி பரவல் தொடர்பாக பத்துக்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று கேள்வியெழுப்பினர்.

கிருமித்தொற்றைப் பரிசோதிக்க சோதனைக் கருவிகளை மருத்துவர்கள் ஏன் வழங்கக் கூடாது, சீனாவிலிருந்து திரும்பும் மக்களால் எத்தகைய ஆபத்துகள் ஏற்படலாம் என்பன உள்ளிட்ட கேள்விகளை உறுப்பினர்கள் எழுப்பினர். 

சுவா சூ காங் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான யீ சியா சிங், கிருமி தொற்றிய பல சம்பவங்களில் மருத்துவமனைக்கு அனுப்புவதற்கு முன்பாக நோயாளிகள் பல மருந்தகங்களுக்குச் சென்றதை சுட்டிக்காட்டினார்.

இதனால் நோயாளிகளுக்கு பரிசோதனைக் கருவிகள் வழங்கப்பட்டால் சிறந்த வழியாக இருக்குமா என்று அவர் கேட்டார்.

இதற்கும் அமைச்சர் கான் கிம் யோங் பதிலளித்தார். 

“ஒவ்வொரு நாளும் ஏறக்குறைய 30,000 பேர் சளி, இருமல் போன்ற சளிக்காய்ச்சல் அறிகுறிகளால் பாதிக்கப்படுகின்றனர். இவர்கள் அனைவருக்கும் சோதனைக் கருவிகளை வழங்குவது சாத்தியமல்ல,” என்றார் அவர்.