எஸ்யுடிடி மாணவர்களுக்கு $12,000 வரை நிதியுதவி

புதிய கல்வி நிதியுதவியை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது சிங்கப்பூர் தொழில்நுட்ப, வடிவமைப்புப் பல்கலைக்கழகம் (எஸ்யுடிடி). அங்கு கல்வி பயிலும் மாணவர்கள் நான்காண்டு பட்டப் படிப்பு காலத்தில் $12,000 வரை நிதியுதவி பெற இது வகைசெய்கிறது.

இந்தப் புதிய சமூக நிதியுதவி ஒவ்வோர் ஆண்டும் 800 பட்டக்கல்வி மாணவர்களுக்கு உதவும் என்று அந்தப் பல்கலைக்கழகம் நேற்று வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.

இந்தப் புதிய நிதியுதவி மற்றும் அங்கு ஏற்கெனவே நடப்பில் இருக்கும் நிதியுதவித் திட்டங்கள் போன்றவற்றின் வழியாக அந்தப் பல்கலைக்கழகத்தில் பயிலும் அனைத்து மாணவர்களும் அவர்களது கல்விக் கட்டணத்தில் மானியம் அல்லது ஊக்க உதவித்தொகை பெறுவர்.

அந்தப் பல்கலைக்கழகத்தில் பயின்றுகொண்டிருக்கும் அல்லது புதிதாகச் சேரும், வேறு நிதியுதவி அல்லது கல்வி உபகாரச்சம்பளம் பெறாத பட்டக்கல்வி மாணாவர்களுக்கு இந்தப் புதிய நிதியுதவித் திட்டத்தின் மூலம் தொடக்கத்தில் $1,500 தொகை வழங்கப்படும்.

“தகுதியைப் பூர்த்தி செய்யும் மாணவர்களுக்கு எட்டு கல்வித் தவணைகளில்  இந்தப் புதிய நிதியுதவி வழங்கப்படும்,” என்று குறிப்பிட்ட எஸ்யுடிடி, “தகுதியுள்ள சிங்கப்பூர் மாணவர்களுக்கு, நிதிப் பிரச்சினைகள் காரணமாக, கல்வி மறுக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய கடப்பாடு கொண்டுள்ளோம்,” என்றது.

பல்கலைக்கழகத்தின் அறக்கட்டளை நிதியிலிருந்து இந்த நிதியுதவித் திட்டம் தொடங்கப்படுவதாகக் கூறப்பட்டது.

குறைந்த மற்றும் நடுத்தர வருமானக் குடும்பங்களிலிருந்து வரும் மாணவர்களுக்கு எஸ்யுடிடி ஏற்கெனவே நிதியாதரவு வழங்கி வருகிறது.  அரசாங்கம் வழங்கும் விரிவுபடுத்தப்பட்ட உயர் கல்வி சமூக உதவித்தொகையுடன், இத்தகைய மாணவர்களின் கல்விக் கட்டணத்தில் 100% மானியம் வழங்கப்படுகிறது.

அதிகமானோர் உயர்கல்வி மேற்கொள்வதை அனைத்து சிங்கப்பூரர்களுக்கும் எளிதாக்க பல்கலைக்கழகங்களும் அரசாங்கமும் முயற்சி எடுத்து வருகின்றன. குறைந்த வருமானக் குடும்பங்களிலிருந்து வரும் மாணவர்களுக்கு கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது.

எஸ்யுடிடியின் புதிய நிதியுதவி பற்றிய விவரங்களுக்கு பல்கலைக்கழகத்தின் https://openhouse.sutd.edu.sg என்ற இணையப்பக்கத்தை நாடலாம். வரும் சனிக்கிழமை காலை 11 மனியிலிருந்து இந்த இணையப்பக்கம் தகவல்களை வழங்கும் என தெரிவிக்கப்பட்டது.

#SUTD #தமிழ்முரசு #FinancialAid