பட்ஜெட் கருத்து: கடைக்காரர்கள் வரவேற்பு

பட்ஜெட் கருத்து: கடைக்காரர்கள் வரவேற்பு

2 mins read
d1949664-40b3-4567-8335-06d3dc1b30b9
அங் மோ கியோ உணவு நிலையத்திற்கு நேற்று வருகை புரிந்த அமைச்சர் இந்திராணி ராஜா, அங்குள்ள கடைக்காரரிடம் பட்ஜெட் குறித்த துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் 'கொவிட்-19' கிருமி பரவிவரும் வேளையில், அண்மையில் அறிவிக்கப்பட்ட வரவுசெலவுத் திட்டத்தில் உணவங்காடி கடைக்காரர்களுக்கு வாடகை கழிவு வழங்கப்படுவதைக் கடைக்காரர்கள் வரவேற்றுள்ளனர்.

கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட அறிக்கையில் பல்வேறு உதவித் திட்டங்களைத் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் அறிவித்திருந்தார்.

பொருள், சேவை வரி உயரும்போது ஏற்படும் தாக்கத்தைக் குறைக்க வழங்கப்படும் $6 பில்லியன் உதவித் திட்டம் அவற்றுள் ஒன்று.

தேசிய சுற்றுப்புற வாரியத்தால் நிர்வகிக்கப்படும் உணவங்காடி கடைக்காரர்களுக்கு ஒரு மாத மதிப்பிலான வாடகை கழிவு வழங்கப்படும். குறைந்தபட்சமாக $200 கழிவு வழங்கப்படும்.

இது குறித்து கடைக்காரர்களிடம் கேட்டறிய பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா நேற்று அங் மோ கியோ உணவு நிலையத்திற்கு வருகை புரிந்தார்.

அங்குள்ள கடைக்காரர்களிடம் ஒரு மணி நேரம் அவர் பேசி கருத்தைப் பெற்றார்.

வரவுசெலவுத் திட்டம் குறித்து பொதுவாக நேர்மறையான கருத்துகளைத் தாம் பெற்றதாக பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறினார். எனினும், கிருமித்தொற்று தொடர்ந்தால் நிலைமை என்னவாகும் என்பது குறித்து ஒரு சிலர் கவலைப்படுவதாக அவர் சொன்னார்.

"ஒட்டுமொத்தமாக, வேலை ஆதரவுத் திட்டத்தில் முதலாளிகள் ஆர்வம் தெரிவித்துள்ளனர். இது மிகவும் முக்கியம். ஏனெனில், ஊழியர்களைத் தக்கவைத்துக்கொள்ள நிறுவனங்களுக்கு இது உதவும். அதே வேளையில், சிங்கப்பூரர்கள் வேலையை இழக்காமல் இருப்பதை இது உறுதிசெய்யும்," என்றார் குமாரி இந்திராணி.

அரசாங்கம் நிலைமையைக் கண்காணித்து வருவதைச் சுட்டிய அவர், தேவை ஏற்பட்டால் அரசாங்கம் கூடுதல் உதவியை வழங்கும் என்று சொன்னார்.

"கிருமித்தொற்றால் ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்ந்தால் கூடுதல் உதவி வழங்க அரசாங்கத்திடம் போதுமான வளங்கள் இருப்பதாக துணைப் பிரதமர் ஹெங் கூறினார்," என்று நிதி, கல்வி இரண்டாம் அமைச்சருமான குமாரி இந்திராணி குறிப்பிட்டார்.

தற்போதைய நிலவரம் ஊக்கமளிப்பதாகச் சொன்ன அவர், ஆக மோசமான நிலவரம் முடிவுக்கு வந்துவிட்டதா என்பது இப்போது சொல்ல முடியாது என்று கூறினார்.

"நிலைமை தொடர்ந்து மாறக்கூடும். எனவே, நாம் கவனத்துடன் இருப்பது முக்கியம்," என்று குமாரி இந்திராணி சொன்னார்.

இதற்கிடையே, சீன வானொலி நிலையம் ஒன்றில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலில் பங்குபெற்ற வர்த்தக, தொழில் மூத்த துணை அமைச்சர் கோ போ கூன், உணவுக் கடைக்காரர்களுக்கு உதவ பல்வேறு திட்டங்கள் இருப்பதை மறுஉறுதிப்படுத்தினார்.

அவற்றில் ஒன்று, உணவுக்கடை உதவியாளர்களுக்கான சம்பள ஆதரவு திட்டம்.

"இந்த ஊழியர்களின் மாத வருமானம் பாதிக்கப்படலாம். எனினும், மற்ற அம்சங்களில் உதவி கிடைக்கும்," என்று டாக்டர் கோ சீன மொழியில் விவரித்தார்.