ஸ்கில்ஸ்ஃபியூச்சர் வழங்கீடுகளைப் பெற சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கைகளில் 90 விழுக்காடு கோரிக்கைகள் விண்ணப்பம் செய்தோரின் வேலைகளுடன் தொடர்புடையவை என்று கல்வி அமைச்சர் ஓங் யி காங் நேற்று தெரிவித்தார்.
தகவல், தொடர்பு தொழில்நுட்பத்துடன் தொடர்புடைய பயிற்சிகளில் பலர் ஈடுபட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
தொழில்நுட்ப இடையூறு, தொழில்நுட்ப மாற்றங்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு மாற்றங்களுக்கு ஏற்ப தங்கள் திறன்களை மேம்படுத்திக்கொள்ள ஊழியர்கள் பயிற்சி பெறுவதாக அவர் கூறினார்.
ஊழியர்களுக்கு அவர்களது வேலைகளுடன் தொடர்புடைய பயிற்சிகளைத் தேர்ந்தெடுக்க எவ்வாறு வழிகாட்டுவது என்பது குறித்து அமைச்சர் ஓங்கிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்குப் பதிலளித்த திரு ஓங், சில மூத்த சிங்கப்பூரர்கள் தங்கள் ஸ்கில்ஸ்ஃபியூச்சர் வழங்கீடுகளைப் பயன்படுத்தி மொழிகள், மலர் அலங்கரிப்பு போன்ற வாழ்வியலுடன் தொடர்புடைய பயிற்சிகளில் ஈடுபடுவதாகவும் கூறினார்.
ஒருசிலருக்குப் பொழுதுபோக்காக தோன்றுபவை மற்றவர்களுக்கு வீட்டிலிருந்து செய்யும் வர்த்தகத்துக்குத் தேவையான திறனாக இருக்கலாம் என்று அமைச்சர் ஓங் கூறினார்.

