இரண்டு மூதாட்டிகள் உட்பட மூவரை மானபங்கப்படுத்திய மலேசிய இளையர்

பெண்டமியரில் உள்ள வெவ்வேறு புளோக்குகளுக்குச் சென்று அங்கு மூன்று பெண்களை மானபங்கப் படுத்தியதாக 17 வயதான மலேசிய இளையர் ஒப்புக்கொண்டுள்ளார்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 16ஆம் தேதி மாலை 6.15 மணியளவில் பெண்டமியர் பகுதியில் இருந்த புளோக் ஒன்றின் மின்தூக்கிக்குள் புகுந்த கமல்ஹன் கவ்னூர் சுப்பிரமணியன் எனும் அந்த இளையர், அந்த மின்தூக்கியில் சென்ற 49 வயதுப் பெண் நான்காவது மாடியில் இறங்க எத்தனித்தபோது அவரது புட்டத்தில் தட்டினார்.

கோபம், பயம், அதிர்ச்சி போன்றவற்றால் பாதிக்கப்பட்ட அந்தப் பெண் இது குறித்து உடனடியாக போலிசில் புகார் அளிக்கவில்லை என அரசுத்தரப்பு வழக்கறிஞர் குறிப்பிட்டார்.

அதே நாள் இரவு 7 மணியளவில் வாம்போவில் உள்ள மற்றொரு புளோக்கு சென்ற அந்த இளையர், குத்துக்காலிட்டு அமர்ந்து செடிகளின் கிளைகளை சமப்படுத்திக்கொண்டிருந்த 79 வயது மூதாட்டியிடம் பேச்சுக்கொடுத்தவாறே அவரது அந்தரங்க உடல் பாகத்தைத் தொட்டுவிட்டு அங்கிருந்து பறந்துவிட்டார்.

அந்த மூதாட்டி உடனடியாக போலிசுக்குத் தகவல் அளித்தார்.

பெண்டமியரில் உள்ள மற்றொரு புளோக்குக்கு இரவு 11.20 மணியளவில் சென்ற அந்த இளையர், மின்தூக்கிக்குள் புகுந்து, அதில் சென்ற 73 வயது மூதாட்டி இறங்க எத்தனித்தபோது அவரது இடது மார்பைப் பிடித்தார். 

அச்சமுற்ற அந்தப் பெண்ணுக்கு ஆங்கிலம் தெரியாததால் அந்த இளையருடன் அவரால் சண்டையிட முடியவில்லை என்று கூறப்பட்டது. 

பாதிக்கப்பட்ட முதல் பெண்ணின் சார்பில் மறுநாள் போலிசில் புகார் அளிக்கப்பட்டது.

கடந்த மாதம் இந்த இளையர் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது. 

அந்த இளையர் மீதான வழக்கில் அடுத்த மாதம் மூன்றாம் தேதி தீர்ப்பளிக்கப்படும்.

ஒவ்வொரு மானபங்க குற்றச்சாட்டுக்கும் ஈராண்டுகள் வரை சிறைத் தண்டனை, அபராதம், பிரம்படிகள் விதிக்கப்படலாம்.

#தமிழ்முரசு