‘பிரதீப் சுப்பிரமணியம் இயற்கை காரணங்களால் மாண்டார்’

உடல் கட்டழகுப் போட்டி வீரரான பிரதீப் சுப்பிரமணியம் 2017ஆம் ஆண்டில் நடைபெற்ற பிரபலங்

களுக்கான ‘முவா தாய்’ தற்காப்புக் கலைப் போட்டியின்போது மயங்கி விழுந்து மாண்டார்.

அவரது மரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. 31 வயது சிங்கப்பூரரான திரு பிரதீப் சுப்பிரமணியம் இயற்கை காரணங்களால் மரணம் அடைந்ததாக அரசு மரண விசாரணை அதிகாரி கமலா பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

திரு பிரதீப் சுப்பிரமணியத்தின் இதயத் தசையில் குறைபாடு காணப்பட்டதாக பிரேதப் பரிசோதனையை நடத்திய தடயவியல் நிபுணர் டாக்டர் வூ ஜியா ஹாவ் தெரிவித்தார். 

இது சீரற்ற இதயத் துடிப்பை ஏற்படுத்தும் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்தக் குறைபாடு திரு பிரதீப்புக்கு இயற்கைக்கு மாறான இதயத் துடிப்பை ஏற்படுத்தக்கூடும் என்றும் அதனால் அவருக்கு திடீரென்று இதய செயலிழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்றும் டாக்டர் வூ கூறினார். ‘முவா தாய்’ போட்டியில் களமிறங்கியதற்கு முன்பு உலக உடல் கட்டழகு சம்மேளனத்தின் தலைவரான திரு பிரதீப், மருத்துவப் பரிசோதனை செய்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டது. 

அதில் அவர் போட்டியில் பங்கேற்க  தகுந்த உடற்திறனுடன் இருந்ததாக உறுதி செய்யப்பட்டது.

தமக்கு உடல்நிலைப் பிரச்சினை ஏதும் இல்லை என்றும் திரு பிரதீப்  சத்தியப் பிரமாணப் பத்திரத்தில் கையெழுத்திட்டார். போட்டிக்கு முன்பு திரு பிரதீப்புக்கு நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனை போதுமானது என்று மருத்துவ நிபுணர்கள் இருவர் தெரிவித்ததாக அரசு மரண விசாரணை அதிகாரி கமலா கூறினார்.

கடுமையான விளையாட்டுகளில் ஈடுபடுவோர் ஆண்டுக்கு ஒருமுறை இதயத் துடிப்பைச் சோதனையிடும் இசிஜி போன்ற மருத்துவப் பரிசோதனைகளைச் செய்து கொள்ள வேண்டும் என்று தேசிய விளையாட்டு அமைப்பான ஸ்போர்ட்ஸ் எஸ்ஜியைச் சேர்ந்த இரண்டு பிரதிநிதிகள் தெரிவித்ததாக திருவாட்டி கமலா கூறினார். 

அதுமட்டுமல்லாது, சில வகை விளையாட்டுகளுக்குத் தகுந்த உடற்திறன் கொண்டிருந்தால் அனைத்து வகை விளையாட்டு களுக்கும் தகுந்த உடற்தகுதி இருப்பதாக முடிவெடுத்துவிடக்கூடாது என்று அந்தப் பிரதிநிதிகள் எச்சரிக்கை விடுத்திருந்ததை திருவாட்டி கமலா சுட்டினார்.