சீன நாட்டு ஊழியர்களின் பற்றாக்குறையைச் சமாளிக்க திங்கள் முதல் புதிய நடவடிக்கை

உற்பத்தித் துறையிலும் சேவைத் துறையிலும் வேலை செய்யும் சீனாவைச் சேர்ந்த ஊழியர்கள் சிங்கப்பூரில் இருந்தவாறே தங்களது வேலைகளை மாற்றிக்கொள்ளலாம். இந்தப் புதிய திட்டம் வரும் திங்கட்கிழமை (மார்ச் 2) முதல் நடப்புக்கு வருகிறது. 

கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு நீடிக்கும் என நம்பப்படும் கிருமித்தொற்று சம்பவங்களில் பாதிக்கப்படும் நிறுவனங்களுக்கு அதிக நீக்குப்போக்கை அளிக்கும் நோக்கில் புதிய இடைக்கால நடவடிக்கை அமையும் என்று மனிதவள அமைச்சு கூறியது.

தற்போதைய விதிகளின்படி வேலை அனுமதிச் சீட்டு வைத்திருக்கும் சீன நாட்டவர் இங்கிருந்தவாறே வேறு வேலைக்கு மாற இயலாது. சிங்கப்பூரைவிட்டு வெளியேறிய பின்னர் அந்த மாற்றத்தை மேற்கொள்ள முடியும்.

ஜூ கூனில் உள்ள வோங் ஃபோங் இன்ஜினியரிங் நிறுவனத்துக்கு நேற்று வருகை மேற்கொண்ட மனிதவள அமைச்சர் ஜோசஃபின் டியோ புதிய திட்டத்தை அறிவித்தார். அதிகப்படியான ஊழியர்களைக் கொண்டிருக்கும் நிறுவனங்கள் ஆள் பற்றாக்குறையை எதிர்நோக்கும் நிறுவனங்களின் ஊழியர் தேவையைச் சமாளிக்க இந்நடவடிக்கை உதவும் என்றும் இருதரப்பிலும் மேற்கொள்ளப்படும் ஒப்புதலின் அடிப்படையில் இது சாத்தியமாகும் என்றும் அவர் தெரிவித்தார். 

பின்னர் மனிதவள அமைச்சு வெளியிட்ட அறிக்கையில்,  நிறுவனங்கள் ஆட்களைத் தேடவும் நியமிக்கவும் செய்யும் செலவுகளை மிச்சப்படுத்த புதிய நடவடிக்கை உதவும் என்றது.

இப்போது அறிவிக்கப்பட்டு உள்ள வேலை மாற்றுத் திட்டம் ஏற்கெனவே கட்டுமானம், கடல் துறை போன்ற துறைகளில் நடப்பில் உள்ளது. அதனை உற்பத்தி, சேவைத் துறைகளுக்கும் நீட்டிக்க சிங்கப்பூர் வர்த்தக சம்மேளனத்துடன் அமைச்சு பங்காளித்துவம் செய்துகொண்டு உள்ளது.