சுகாதார அமைச்சு: ஆண்டுதோறும் 19,000 பேருக்கு நீரிழிவு உறுதி செய்யப்படுகிறது

ஒவ்வோர் ஆண்டும் சுமார் 19,000 பேருக்கு 'டைப் 1' அல்லது 'டைப் 2' நீரிழிவு நோய் உறுதி செய்யப்படுவதாக சுகாதாரத்திற்கான மூத்த நாடாளுமன்ற செயலாளர் அம்ரின் அமின் நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.

சுகாதார பரிசோதனை செய்வதற்குக் கூடுதல் வசதி இருப்பதாலும் இந்நோயை முன்கூட்டியே கண்டுபிடிப்பதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு சிங்கப்பூரர்களுக்கு இருப்பதாலும் குறுகிய காலத்திற்கு இந்நோயாளிகளின் எண்ணிக்கை கூடுவதைத் தமது அமைச்சு எதிர்பார்ப்பதாகவும் திரு அம்ரின் தெரிவித்தார்.

கடந்த ஐந்து ஆண்டுகளுக்கான வருடாந்திர நீரிழிவுச் சம்பவங்களின் எண்ணிக்கை பற்றிய அங் மோ கியோ குழுத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் இன்டான் அசுரா மொக்தாவின் கேள்விக்கு பதிலளித்தபோது திரு அம்ரின் இந்தத் தகவல்களை வெளியிட்டார்.

நீரிழிவு நோய் ஏற்படும் அபாயத்தைக் குறைப்பதற்கும் நீரிழிவு நோயாளிகள் மேலும் பல்வேறு சிக்கல்களால் பாதிக்கப்படுவதைத் தாமதப்படுத்துவதற்கும் பல்வேறு திட்டங்கள் ஏற்கெனவே  நடப்பில் இருப்பதாக திரு அம்ரின் தெரிவித்தார்.

ஆயினும், நீரிழிவு ஏற்படுவதும் அந்நோயால் ஏற்படும் சிக்கல்களின் விகிதமும் குறைய பல ஆண்டுகள் ஆகலாம் என்று அவர் கூறினார். 

ஆக அண்மைய தேசிய மக்கள்தொகை சுகாதார கருத்தாய்வின்படி, சிங்கப்பூரர்களில் 8.6 விழுக்காட்டினர் நீரிழிவு நோயாளிகள் என 2017ல் பதிவானது.