அதிபர் ஹலிமா யாக்கோப் போலிசில் புகார்: விருந்துக்கு அழைக்கும் மின்னஞ்சல் போலி

அதிபர் ஹலிமா யாக்கோப், பிரதமர் லீ சியன் லூங் மற்றும் இதர அமைச்சர்களுடன் அடுத்த மாதம் 10ஆம் தேதியன்று ஒரு விருந்து நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுமாறு  மின்னஞ்சலில் அனுப்பப்பட்டு வரும் அழைப்பு போலியானது என்று கூறிய அதிபர் ஹலிமா, இதன் தொடர்பில் போலிசில் புகார் செய்துள்ளார்.
ஏமாற்றும் நோக்கத்துடன் இந்த மின்னஞ்சல் வலம் வருவதாக அதிபர் தமது ஃபேஸ்புக் ஆதரவாளர்களிடம் தெரிவித்தார்.
மின்னஞ்சலில் ஓர் அழைப்புக் கடிதம் இணைக்கப்பட்டிருக்கும். பின்னர் அதை ‘கிளிக்’ செய்வோர் தங்களின் மின்னஞ்சல் மறைச்சொற்களைக் குறிப்பிடவேண்டும்.
இதன் தொடர்பில் மோசடி மின்னஞ்சல்களை அடையாளம் கண்டு அறிந்துகொள்ளுமாறு அதிபர் ஹலிமா கேட்டுக்கொண்டார்.
அத்துடன் இணைய மோசடிகளுக்கு எதிராகத் தங்களைத் தற்காத்துக்கொள்ளவும் சிங்கப்பூரர்களுக்கு அதிபர் அறிவுறுத்தினார்.