அனுமதியின்றி கொத்துமல்லியை கொண்டு வந்ததற்காக அபராதம்

அனுமதியில்லாமல் 456 கிலோ கொத்துமல்லியை இறக்குமதி செய்ததற்காக நேற்று 47 வயது கோ சீ வீக்கு $3,000 அபராதம் விதிக்கப்பட்டது. மொத்த வியாபாரம் செய்யும் ‘டேய்லி கோ ஃபிரெஷ்’ நிறுவனத்தில் பங்காளியாக இருக்கும் கோ, அனுமதிக்கப்பட்டதற்குப் புறம்பாக நடந்துகொள்ளும் வகையில் காய்கறிகளை உற்பத்தி செய்த குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார்.

சென்ற ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதியன்று பாசிர் பஞ்சாங் மொத்த வியாபாரச் சந்தையில் இருந்த சரக்கு வண்டியை சிங்கப்பூர் உணவு அமைப்பு அதிகாரிகள் சோதனையிட்டதில் தாய்லாந்திலிருந்து கொண்டு வரப்பட்ட பழங்களும் காய்கறிகளும் இருந்ததாகவும் அவற்றுடன் 456 கிலோ கொத்துமல்லி இருந்ததாகவும் கண்டுபிடிக்கப்பட்டது. கோவின் இறக்குமதி அனுமதியில் கொத்துமல்லி குறிப்பிடப்படவில்லை.

அதிக அளவில் கொத்துமல்லியைக் கொண்டு வந்ததைச் சாதாரணமாகக் கருத முடியாது என்றும் பூச்சிக்கொல்லி தெளிக்கப்படுவதால் அது ஓர் ஆபத்தான காய்கறியாகக் கருதுவதாகவும் அரசுத்தரப்பு வழக்கறிஞர் கூறினார்.