‘இந்தோனீசியா தேடும் நபர் சிங்கப்பூரில் இல்லை’

இந்தோனீசிய அதிகாரிகளால் தேடப்பட்டு வரும் முன்னாள் எண்ணெய் நிறுவனர் ஹொங்கோ வென்டராட்னோ சிங்கப்பூரில் இருப்பதாகவும் அவர் இங்கு நிரந்தரவாசியாக உள்ளதாகவும் கூறும் இந்தோனீசிய செய்தி அறிக்கைகளை சிங்கப்பூர் மறுத்துள்ளது.

குடிநுழைவுப் பதிவுகளைப் பொறுத்தவரை அவர் சிங்கப்பூரில் இல்லை என்று வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் இன்று தெரிவித்தார். இதனை 2017ஆம் ஆண்டு முதல் இந்தோனீசிய அதிகாரிகளிடம் தெரிவித்து வருவதாகவும் கூறினார்.

2010ஆம் ஆண்டில் டீசல் எண்ணெய்யின் சட்டவிரோத கொள்முதல் ஊழல் வழக்கு தொடர்பில் 2015ஆம் ஆண்டிலிருந்து விசாரணைக்காக ஹொங்கோ தேடப்பட்டு வருகிறார். இம்மாதம் 10ஆம் தேதியன்று வழக்கு விசாரணை தொடங்கியது. அதன் தொடர்பில் நடைபெற்ற ஒரு நாடாளுமன்ற ஆணையக் கூட்டத்தில், ஹொங்கோ வென்டராட்னோவை இந்தோனீசியாவுக்குக் கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என்றும் அவர் சிங்கப் பூரில் தலைமறைவாக இருக்கிறார் என்றும் அரசாங்கத் தலைமை ஆணையர் கூறியிருந்ததாக அறிக்கைகள் கூறுகின்றன.

“சிங்கப்பூருடன் தொடர்புகொள்ள நாங்கள் முயற்சி செய்துள்ளோம். சந்தேக நபர் என்ற பட்சத்தில் ஒருவரைத் திரும்ப அனுப்புவது சிரமம் என்று அவர்கள் பதிலளித்தார்கள்,” என்றும் அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டது.