ரயில் நம்பகத்தன்மை மேம்பாட்டுக்கு $100 மி.

நாட்டின் அனைத்து ரயில் பாதைகளிலும் பாவனைப் பயிற்சிக்கான வசதிகளைக் கட்டுவதற்காக அடுத்த ஐந்து ஆண்டுகளில் கிட்டத்தட்ட $100 மில்லியன் ஒதுக்கப்படும். இதனால் ரயில் சேவைகளின் நம்பகத்தன்மை மேம்படும் என்று கூறப்படுகிறது.

புதிதாகக் கட்டப்படவுள்ள இந்த வசதிகள் தளபத்திய நிலையங்கள் போல இயங்கும். ரயில் தடத்தில் கோளாறு, ரயில் பாதைக்கு எதிராக இணையப் பாதுகாப்பு மிரட்டல் போன்ற பல சூழல்களைப் பாவித்துப் பயிற்சி செய்ய முடியும். 

இதற்காகப் பயன்படுத்தப்படும் வன்பொருளும் மென்பொருளும் உண்மையான அமைப்புமுறைகளின் அச்சாக இருந்தாலும் அவற்றுக்கும் நாட்டில் இயங்கி வரும் ரயில் பாதைகளுக்கும் எவ்வித இணைப்பும் இல்லை. 

இதனால் வெவ்வேறு சூழல்களைக் கொண்டு வசதிகளை இயக்குபவர்கள் பாவனைப் பயிற்சியை மேற்கொள்ளலாம்.

நேற்று கலி பாத்து முனையத்தில் டவுன்ட்டவுன் ரயில் பாதைக்காக கட்டப்பட்ட இரண்டாவது பாவனைப் பயிற்சி நிலையத்திற்கு சென்றிருந்தார் போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வான்.

சிக்கலான சமிக்ஞை அமைப்புகளைப் பற்றிய நுணுக்கத்தை ஆழமாக அறிந்திருப்பது முக்கியம் என்று அவர் கூறினார்.

$100 மில்லியன் என்பது மிக அதிக அளவிலான பணம் என்றாலும் இது எதிர்காலத்திற்கு ஓர் உன்னத முதலீடாக அமைந்திடும் என்று அமைச்சர் கோ தெரிவித்தார்.