எதிர்பாராத வகையில் 3.4% ஏற்றம் கண்ட உற்பத்தித் துறை

சிங்கப்பூரின் உற்பத்தித் துறை சென்ற ஆண்டு ஜனவரியுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டு ஜனவரி மாதத்தில் எதிர்பாராத வகையில் 3.4% உயர்ந்தது. பொருளியல் வளர்ச்சிக் கழகம் நேற்று வெளியிட்ட அறிக்கை இதனை தெரிவித்தது. அதற்கு முந்தைய மாதத்தில் 3.7% சரிவு பதிவாகியிருந்தது.

ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் புளூம்பர்க் பொருளியல் நிபுணர்கள் முன்னுரைத்த 5.8% சுருக்கம் ஏற்படாமல் உயிர்மருத்துவத் துறையின் பங்கு இல்லாமலும் அண்மைய நிலவரம் மேம்பட்டு உள்ளது. 

மாதத்திற்கு மாதம் அடிப்படையில் ஒட்டுமொத்த உற்பத்தித் துறை 18.2% உயர்ந்தது. உயிர்மருத்துவ உற்பத்தியைச் சேர்க்காமல் ஏற்பட்ட வளர்ச்சி 11.8%.

மருந்தகத் துறை 59.4% ஏற்றம் கண்டதால் ஆண்டுக்காண்டு அடிப்படையில் ஜனவரியில் உயிர் மருத்துவத் துறையில் 41.1% பதிவானது. வெவ்வேறு மருந்துப் பொருட்களின் கலவை உற்பத்தியானதாலும் உயிரியல் பொருட்கள் கூடுதலாக உற்பத்தியானதாலும் இந்த அதிகளவு ஏற்றம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

மருத்துவத் தொழில்நுட்பத் துறையின் உற்பத்தி 5.3% சரிந்தது. மின்னணுவியல் துறை ஆண்டு அடிப்படையில் ஒப்பிடுகையில் இவ்வாண்டு ஜனவரியில் 7.2% சரிவு கண்டது.

சிங்கப்பூரின் உற்பத்தித் துறையில் கால்பங்கு வகிக்கும் மின்னணுவியல் துறை டிசம்பரில் 1.1% ஏற்றம் கண்டது. 

இதற்கிடையே நுண்ணிய பொறியியல் துறை சென்ற ஆண்டுடன் ஒப்புநோக்க ஜனவரியில் 18.1% வளர்ச்சி கண்டது.

ரசாயன உற்பத்தித் துறையும் ஆண்டுக்காண்டு அடிப்படையில் 5.5% வீழ்ச்சி அடைந்தது.

போக்குவரத்துப் பொறியியல் துறை ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 9.3% வீழ்ச்சி கண்டது. அனைத்து உட்பிரிவுகளிலும் சரிவு ஏற்பட்டதால் இந்த வீழ்ச்சி பதிவானதாகக் கூறப்படுகிறது.