சுடச் சுடச் செய்திகள்

லிட்டில் இந்தியாவில் விற்கப்படவிருந்த $200,000 மதிப்புள்ள ‘ஹான்ஸ்’ புகையிலை பறிமுதல்

லிட்டில் இந்தியாவிலும் துவாஸ் பகுதியிலும் விற்பனைக்கு அனுப்பப்படவிருந்த ‘ஹான்ஸ்’ எனப்படும் புகையிலையை இதுவரை இல்லாத அளவுக்கு சிங்கப்பூர் சுகாதார அறிவியல் ஆணையம் பறிமுதல் செய்துள்ளது.

சுமார் $200,000 மதிப்பிலான மெல்லும் புகையிலைப் பொட்டலங்களைக் கைப்பற்றியதாக இன்று (பிப்ரவரி 27) ஆணையம் குறிப்பிட்டது. பிடிபட்ட பொட்டலங்களின் எண்ணிக்கை 118,000.

இம்மாதம் 19ஆம் தேதி உட்லண்ட்சில் இருக்கும் சேமிப்புக் கிடங்கு ஒன்றிலிருந்து டிராலியில் அவற்றைத் தள்ளிச் சென்ற ஆடவரையும் போலிசார் கைது செய்தனர். அந்த ஆடவரைப் பற்றிய தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை.

லிட்டில் இந்தியாவிலும் துவாஸ் பகுதியிலும் விற்பதற்காக அவை வைக்கப்பட்டிருந்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

மெல்லும் புகையிலையை இறக்குமதி செய்வது, விநியோகிப்பது, விற்பனை செய்வது ஆகிய அனைத்தும் சிங்கப்பூரில் சட்ட விரோதம்.  இணையம் வழியாக வாங்குவதும்கூட குற்றமே.

மற்றொரு நடவடிக்கையில், ‘விசாட்’ இணையத்தளம் வழியாக மின் சிகரெட்டுகளையும் அவை சார்ந்த சாதனங்களையும் விற்பனை செய்த 48 வயது சிங்கப்பூர் ஆடவர் கைதானார்.

மின் சிகரெட்டுகள், அவை சார்ந்த சாதனங்கள் உள்ளிட்ட 3,600க்கும் அதிகமான பொருள்களை அந்த ஆடவரின் வாகனத்திலும் வீட்டிலும் அதிகாரிகள் கண்டுபிடித்தனர். சிங்கப்பூரில் தடை செய்யப்பட்ட அந்தப் பொருள்களின் மொத்த மதிப்பு சுமார் $50,000 என்று சுகாதார அறிவியல் ஆணையம் கூறியது. 

மெல்லும் புகையிலை, மின் சிகரெட்டுகள் ஆகியவை ஒரே சட்டத்தின்கீழ் தடை செய்யப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தகைய குற்றத்தை முதன்முறை புரிவோருக்கு ஆறு மாதங்கள் வரை சிறைத் தண்டனை, $10,000 வரையிலான அபராதம் போன்றவை விதிக்கப்படலாம். மீண்டும் அதே குற்றச் செயலில் ஈடுபட்டால் முதல்முறை விதிக்கப்பட்டதைவிட இரட்டிப்பு தண்டனை விதிக்கப்படலாம்.

#புகையிலை #இ-வேப்பரைசர் #சிங்கப்பூரில் தடை #தமிழ்முரசு