வடகிழக்கு ரயில் பாதையில் ஏற்பட்ட மின் கோளாறு காரணமாக அந்தப் பாதையின் ரயில் சேவையில் நேற்று ஆறு மணிநேர தாமதம் ஏற்பட்டது. இதில் பயணிகள் வசதிக்காக மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டும் குழப்பம் நிலவியதாகக் கூறப்படுகிறது.
நேற்று காலை 6 மணிக்கு மின் கோளாறு குறித்துத் தனது இணையத்தளங்களில் தெரிவித்தது எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனம்.
இதனால் பொங்கோல், செங்காங், புவாங்கோக் ரயில் நிலைய சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியது.
இதற்காக, வழக்கமான சேவை வழங்குவதற்குப் பதிலாக, எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனம் பொங்கோல், புவாங்கோக் நிலையங் களுக்கு இடையே ஒரு ரயில் தடத்தில் இணைப்பு ரயில் சேவையை வழங்கியது. அத்துடன் இலவச பேருந்து சேவையையும் வழங்கியது.
எனினும், இலகு ரயில் சேவையுடன் இணைக்கப்பட்டுள்ள பொங்கோல், செங்காங் ரயில் நிலையங்களில் காலை உச்சநேரத்தில் பெருகிய பயணிகள் கூட்டத்தைச் சமாளிக்க இம்மாற்று ஏற்பாடுகள் போதுமானதாக இல்லை.
இதில் தங்களது பயண நேரம் கிட்டத்தட்ட 40 நிமிடங்களுக்குக் கூடியதாக பயணிகளில் சிலர் கூறினர். பின்னர், காலை 10.40 மணிக்கு எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனம் மற்றோர் அறிவிப்பை வெளியிட்டது.
அதன்படி, மின் கோளாற்றைச் சரிசெய்வதற்காக பொங்கோல், ஹவ்காங் ரயில் நிலையங்களுக்கு இடையிலான அனைத்து ரயில் சேவைகளும் முற்றிலுமாக நிறுத்தப்படுவதாக அறிவித்தது.
மேலும், சிராங்கூன், ஹவ்காங் ரயில் நிலையங்களுக்கு இடையிலான ரயில் சேவைக்குப் பதிலாக ரயில் இணைப்பு சேவை வழங்கப்படும் என அறிவித்தது.
காலையில் மூன்று ரயில் நிலைய சேவைகள் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்த நிலை மாறிப் பின்னர் ஆறு ரயில் நிலையங்களின் சேவை பாதிப்புக்கு உள்ளானது.
மின் கோளாறு பின்னர் பிற்பகல் 12.22 மணிக்குச் சரிசெய்யப்பட்டது. ஆனால் பயணிகள் நெரிசலைச் சமாளிக்க தொடர்ந்து பேருந்து சேவை இயங்கியது.
ரயில் சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதை அறிந்த ரோசி என்ற பயணி தான் வழக்கத்துக்கு மாறாக தாமதமாக காலை 10.30 மணிக்கு செங்காங் ரயில் நிலையத்துக்குச் சென்றதாகக் கூறினார்.
"சாதாரணமாக ரயில் சேவை தாமதம் இரண்டு மணிநேரம்தான் இருக்கும் என எண்ணியிருந்தேன். ஆனால், இப்பொழுது காலை மணி 10.30 ஆகிறது, இன்னமும் தாமதம் நீடிக்கிறது," என்று தெரிவித்தார்.
இதற்கிடையே வழிகாட்டுவதற்காக நிறுத்தப்பட்ட எஸ்பிஎஸ் டிரான்சிட் ஊழியர்கள் கூறியது குழப்பத்தை அளித்ததாக சில பயணிகள் தெரிவித்தனர்.
அதிகாரிகளின் அறிவிப்பும் ஆங்காங்கே இருந்த அறிவிப்புப் பலகைகளும் தெளிவாக இல்லை என்றும் கூறப்பட்டது.

