கள்ளக் குடியேறிகளைப் பிடிக்க உதவிய இந்தியருக்கு விருது

கள்ளத்தனமாக சிங்கப்பூருக்கு நீந்தி வந்த மூன்று சந்தேக நபர்களைக் கண்டதும் சற்றும் யோசிக்காமல் உடனே தம் மோட்டார் சைக்கிள் மீது தாவிக் குதித்து அவர் களைப் பின்தொடர்ந்தார் பாதுகாவல் அதிகாரி திரு நடராஜா லோகேஸ்‌ராஜா, 32.

போலிசுடன் தொடர்புகொண்டு தகவல் தந்தவாறே சந்தேக நபர்களின் நடமாட்டத்தை நோட்டமிட்டார். மூவரில் இரண்டு பேர் ஒரு டாக்சியில் தப்பிக்க முயன்றதுடன் மூன்றாவது நபர் மாயமானார். 

ஆனாலும் திரு நடராஜா அவர்களை விடுவதாக இல்லை. அவர்களைத் தம்மால் முடிந்த அளவுக்குத் துரத்தினார். அதைத் தொடர்ந்து சந்தேக நபர்களைப் பிடிக்க கிட்டத்தட்ட 100 அதிகாரிகள் களத்தில் இறக்கப்பட்டனர். மூன்று கள்ளக் குடியேறிகளும் சிக்கினர். இச்சம்பவம் கடந்த ஆண்டு அக்டோபர் 21ஆம் தேதியன்று நடந்தது. ஈராண்டுக்கு முன்னரும் இதேபோல் தாம் வேலை செய்யும் துவாஸ் சௌத் பொலிவாட் பகுதி யிலுள்ள கட்டுமானத் தளத்தில் கள்ளக் குடியேறிகளைப் பார்த்ததாகத் திரு நடராஜா பகிர்ந்துகொண்டார்.

“சிங்கப்பூரை என் இல்லமாக கருதுகிறேன். ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் நான் எதையும் செய்ய தயங்கமாட்டேன்,” என்றார் அவர்.

அவரின் செயலைப் பாராட்டி நேற்று அவருக்குப் பொதுநல உணர்வுமிக்க விருது வழங்கப்பட்டது. ஜூரோங் போலிஸ் தலைமையகத்தில் நடந்த விருதளிப்பு விழாவில் அவருடன் மேலும் இருவருக்கு விருது வழங்கப்பட்டது.  

திரு ஹிடயாட் பின் ஹசான் சென்ற ஆண்டு நடந்த ஒரு சம்பவத்தில் காணாமல் போன ஓர் ஏழு வயது சிறுமியைக் கண்டுபிடிக்க உதவியிருந்தார். 

‘கிராப்’ நிறுவனத்தில் தொடர்பு அதிகாரியாகப் பணிபுரியும் திரு டெஸ்மண்ட் இங், வீடு புகுந்து கொள்ளையடித்த சந்தேக நபர்கள் சென்ற இடங்களைக் கண்டுபிடிக்க போலிசாருக்கு உதவினார்.

போலிசாருக்கும் சமூகத்தினருக்கும் இடையே வலுவான பங்காளித்துவம் இருப்பதைக் கண்டு பெருமிதம் கொள்வதாக ஜூரோங் போலிஸ் பிரிவின் தலைவரான உதவி போலிஸ் ஆணையாளர் தேவ்ராஜன் பாலா நிகழ்வில் கூறினார்.