மின்தூக்கியில் எச்சில் உமிழ்ந்த சிறுவர்கள் கைது

வீவக புளோக்குகளில் அமைந்துள்ள பொது மின்தூக்கிகளில் எச்சில் உமிழ்ந்ததற்காக 12 மற்றும் 17 வயது சிறுவர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொங்கோல் வாக் மற்றும் அங் மோ கியோ ஸ்திரீட் 32 ஆகிய வட்டாரங்களில் உள்ள மின்தூக்கிகளின் கண்ணாடிகளிலும் பொத்தான்களிலும் எச்சில் காணப்பட்டதாக போலிசாருக்கு இரு வேறு புகார்கள் கிடைத்ததாக நேற்று போலிசார் தெரிவித்தனர். புகார்கள் சென்ற ஞாயிற்றுக்கிழமையும் செவ்வாய்க்கிழமையும் செய்யப்பட்டதாக அவர்கள் கூறினர்.

கொரோனா கிருமித்தொற்று பரவலுக்கு இடையே இந்தச் சம்பவங்கள் பதற்றத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தி உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

போலிஸ் கேமராக்களின் உதவியுடன் அங் மோ கியோ போலிஸ் பிரிவின் அதிகாரிகள் இரு சிறுவர்களையும் அடையாளம் கண்டனர்.

தற்போது இருவரும் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.   

இதே போன்ற இன்னொரு சம்பவத்தில் இம்மாதம் 20ஆம் தேதியன்று ரும்பியா இலகு ரயில் சேவை நிலையத்தில் உள்ள மின்தூக்கியின் பொத்தான்கள் மீது எச்சில் உமிழப்பட்டிருந்தது. 

அதன் தொடர்பில் எஸ்பிஎஸ் டிரான்சிட் அளித்த புகாரை அடுத்து மூன்று பதின்ம வயது இளையர்களை போலிசார் விசாரித்து வருகின்றனர்.

பொதுமக்களுக்குத் தொல்லை கொடுத்த குற்றத்திற்காக $2,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.