கண்ணாடியிழை அகண்ட அலைவரிசை இணையக் கம்பிவடங்கள் சேதமடைந்ததைத் தொடர்ந்து அங் மோ கியோ, பீஷான் ஆகிய வட்டாரங்களில் நேற்று முன்தினம் இணையச் சேவை தடைப்பட்டது.
அப்பகுதிகளில் வசிக்கும் ஏறத்தாழ 1,000 பயனாளர்கள் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக சேவைத் தடையால் பாதிக்கப்பட்டனர்.
அங் மோ கியோ அவென்யூ 1 வழியாக போடப்பட்டிருந்த இணையக் கம்பிவடங்கள் மூன்றாம் தரப்பு ஒப்பந்ததாரரால் சேதப்படுத்தப்பட்டதாக கண்ணாடியிழை அகண்ட அலைவரிசை இணையச் சேவையை நிர்வகிக்கும் 'நெட்லிங்க் டிரஸ்ட்' நிறுவனம் கூறியது.
இதில் சம்பந்தப்பட்ட அந்த ஒப்பந்ததாரரைத் தானோ தனது துணை நிறுவனங்களோ வேலைக்கு அமர்த்தவில்லை என்று நெட்லிங்க் டிரஸ்ட் நிறுவனம் குறிப்பிட்டது.
இணையச் சேவையில் தடங்கல் ஏற்பட்டிருப்பது குறித்து நேற்று முன்தினம் மாலை 5.30 மணியளவில் தனக்குப் புகார் அளிக்கப்பட்டதாக அந்நிறுவனம் கூறியது. பிரச்சினையைச் சரிசெய்ய, அந்நிறுவனத்தின் சேவை மீட்புக் குழு முடுக்கிவிடப்பட்டது.
நேற்று முன்தினம் இரவு 11.50 மணிக்கு இணையச் சேவை வழக்கநிலைக்குத் திரும்பியதாக நெட்லிங்க் டிரஸ்ட் தெரிவித்தது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் இணையச் சேவையில் ஏற்பட்ட கோளாற்றை விரைவில் சரிசெய்ய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட தரப்புடன் சேர்ந்து தான் பணியாற்றியதாக நெட்லிங்க் டிரஸ்ட் நிறுவனம் விவரித்தது.

