உள்துறை அமைச்சை சேர்ந்த சீருடை அணிந்த அதிகாரிகளின் ஓய்வுபெறும் வயது 2030ஆம் ஆண்டுக்குள் 58 ஆக உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அவர்களுக்கான ஓய்வுபெறும் வயது 55.
ஓய்வுபெறும் வயது உயர்த்தப்படுவதால் அனுபவமிக்க அதிகாரிகளின் சேவைகள் அமைச்சுக்குக் கிடைக்கும். அதே சமயத்தில் மீண்டும் அர்த்தமுள்ள பணியைத் தொடர அதிகாரிகளுக்கு இந்த மாற்றம் உதவும் என்று தமது அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டு விவாதத்தின்போது அமைச்சர் கா.சண்முகம் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
மாறிவரும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ப உள்துறை அமைச்சுக் குழு தொடர்ந்து நேர்த்தியுடன் செயல்
படுவதை உறுதி செய்ய நிறைய முதலீடு தேவை என்றார் அவர்.
"மற்றவர்களைப் போலவே வேலையில் சேர்வதிலிருந்து ஓய்வு பெறும் வரை தொடர்ந்து புதிய திறன்களைக் கற்றுக்கொள்வது குறித்து எங்கள் அதிகாரிகளை ஊக்குவிக்க எங்களது பங்காளிகளுடன் இணைந்து செயல்படுகிறோம்," என்று அமைச்சர் சண்முகம் தெரிவித்தார்.
சிங்கப்பூர் போலிஸ் படை இந்த ஆண்டு தனது 200வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுவதை திரு சண்முகம் சுட்டினார்.
சிங்கப்பூர் போலிஸ் படை 1820ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது. அப்போது சிங்கப்பூரில் குண்டர் கும்பல்கள், கலவரங்கள், கடற்கொள்ளையர் போன்ற பிரச்சினைகள் இருந்தன. சட்டத்தை நிலைநாட்ட உடனடியாக போலிஸ் அதிகாரிகள் தேவைப்பட்டனர். சிங்கப்பூர் போலிஸ் படை தொடங்கியபோது அதில் 12 அதிகாரிகள் மட்டும் இருந்தனர்.
அன்றிலிருந்து இன்றுவரை சிங்கப்பூர் போலிஸ் படை மேம்பட்டு மேலும் வலுவடைந்திருப்பதாக திரு சண்முகம் தெரிவித்தார். கலவரத் தடுப்புப் பிரிவு, இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு போலிஸ் படைக்கென்றே தனி தொலைபேசி அழைப்புச் சேவையைத் தொடங்கியது போன்ற முக்கிய நிகழ்வுகளை திரு சண்முகம் மேற்கோள் காட்டினார்.
"சிங்கப்பூர் போலிஸ் படை அதிகாரிகளின் நிபுணத்துவம், தயார்நிலை, கடந்த பல ஆண்டுகளாக செய்துள்ள தியாகங்கள் ஆகியவற்றை நாம் அங்கீகரித்து அவர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்," என்று அமைச்சர் சண்முகம் தெரிவித்தார்.

