சிறார்கள், பெரியவர்கள் அனை வரும் இனிமேல் கட்டணக் கழிவு டன் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். 18 வயதுக்கும் குறைவான சிங்கப்பூரர்கள் முழு கட்டணக் கழிவுக்குத் தகுதி பெறுகின்றனர்.
குழந்தைப் பருவ தடுப்பூசித் திட்டம், குழந்தைப் பருவ மருத்துவப் பரிசோதனைகள் ஆகிய திட்டங்களின்கீழ், சமூக சுகாதார உதவித் திட்டம் (சாஸ்) நடப்பில் உள்ள அனைத்து தனியார் மருந்தகங்களிலும் பலதுறை மருந்தகங்களிலும் இவ்வாண்டு இறுதிக்குள் இச்சேவை செயல்படுத்தப்படும் என்று சுகாதார, உள்துறை அமைச்சுகளுக்கான மூத்த நாடாளுமன்றச் செயலாளர் அம்ரின் அமின் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். தேசிய குழந்தைப் பருவ தடுப்பூசித் திட்டத்தில் காசநோய், ஹெபட்டைட்டிஸ் பி, நிமோனியா, மெனிங்கைட்டிஸ், ரத்தம் தொடர்பான தொற்றுகள் போன்ற நோய்களை ஏற்படுத்தக்கூடிய நியூமோகோக்கல் தொற்று ஆகியவற்றுக்கான எட்டு வகையான தடுப்பூசிகள் அடங்கும்.
பெரியவர்களுக்கான தேசிய தடுப்பூசித் திட்டத்தின்கீழ் சிங்கப்பூரர்கள் கழிவுக் கட்டணத்துடனான தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ளலாம்.
இதில் ஏழு தடுப்பூசிகள் அடங்கும். குறைந்த, நடுத்தர வருமானம் ஈட்டுவோருக்கு பலதுறை மருந்தகங்களில் 75% கட்டணக் கழிவு வழங்கப்படும்.
ஏனையோ 50% கழிவைப் பெறலாம்.
முன்னோடித் தலைமுறையினருக்கு கூடுதலாக 50% கழிவும்; மெர்டேக்கா தலைமுறையினருக்கு கூடுதலாக 25% கழிவும் கிடைக்கும்.
சாஸ் தனியார் மருந்தகங்களில் போடப்படும் கழிவுக் கட்டணங்களுடனான தடுப்பூசிகளுக்கு கட்டண வரம்பை சுகாதார அமைச்சு அறிமுகப்படுத்தும். இதுதொடர்பான விவரங்கள் கூடிய விரைவில் வெளியிடப்படும்.

