மனநலப் பிரச்சினையுள்ள இளையர்களுக்கு உதவி

2 mins read

மனநலப் பிரச்சினையுள்ள இளையர்களுக்கு உதவ 'ஒருங்கிணைக்கப்பட்ட இளையர் சேவை' எனும் திட்டம் இவ்வாண்டின் பிற்பகுதியில் அறிமுகப்படுத்தப்படுகிறது.

உட்லண்ட்ஸ் வட்டாரத்திலுள்ள கேர் கார்னர் எனும் லாப நோக்கமற்ற அமைப்பின் சமூக இடத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். மனநலக் கழகம், சுகாதார அமைச்சு, ஒருங்கிணைக்கப்பட்ட பராமரிப்புக்கான அமைப்பு ஆகியவற்றுடன் கேர் கார்னர் இணைந்து செயல்படும்.

இந்தத் தகவல்களை சுகாதார மூத்த துணை அமைச்சர் லாம் பின் மின் நேற்று நாடாளுமன்றத்தில் வெளியிட்டார்.

சட்டத்தை மீறும் அல்லது பள்ளிக்கு செல்வதை அடிக்கடி தவிர்க்கும் இளையர்களுக்கு இத்திட்டம் மூலம் உதவி வழங்கப்படும். பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய இளையர்கள் இந்தத் திட்டத்தின் வழி ஒருங்கிணைக்கப்பட்ட மனநல, சமூக ஆதரவு சேவைகளைப் பெறலாம்.

கூடுதல் உதவி தேவைப்படுவோர் தகுந்த சுகாதார, சமூக சேவைக்குப் பரிந்துரை செய்யப்படுவர் என்று டாக்டர் லாம் கூறினார். 2016ல் மனநலப் பிரச்சினைக்காக பொது மருத்துவமனைகளில் 7 வயதுக்கும் 18 வயதுக்கும் இடைப்பட்ட 569 பேர் அனுமதிக்கப்பட்டனர். இந்த எண்ணிக்கை 2017ல் 640ஆகவும் 2018ல் 607ஆகவும் இருந்தது.

கடந்த 2017ஆம் ஆண்டிலிருந்து 2019ஆம் ஆண்டு வரை ஒவ்வோர் ஆண்டிலும் சராசரியாக 1,204 தற்கொலை முயற்சி வழக்குகள் பதிவாகியதாக உள்துறை அமைச்சு தெரிவித்தது.

மனநோயாளி பராமரிப்பாளருக்கு கூடுதல் ஆதரவு

மனநோயாளிகளைப் பராமரிப்பவர்களுக்குக் கூடுதல் ஆதரவு வழங்கும் புதிய திட்டம் அறிமுகப் படுத்தப்பட உள்ளதாக என்று சுகாதார மூத்த துணை அமைச்சர் ஏமி கோர் தெரிவித்தார்.

இத்திட்டத்தின்கீழ், ஒருவர் மனநலப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியானதும் அவரது நோய் குறித்த தகவல், பராமரிக்கும் முறை ஆகியவை பற்றி அவரைப் பராமரிப்பவர்களிடம் மருத்துவமனை எடுத்துரைக்கும். தேவையான சுகாதார, நிதி, சமூக ஆதரவு சேவைகளுடன் பராமரிப்பாளர்களை மருத்துவமனை இணைக்கும்.