தூதுவர்களாக செயல்படும் வெளிநாட்டு ஊழியர்கள்

தூதுவர்களாக செயல்படும் வெளிநாட்டு ஊழியர்கள்

2 mins read
a9e7a802-66fb-4d21-bfdb-85866a57619a
கொவிட்-19 கிருமித்தொற்று நிலவரம் குறித்து வெளிநாட்டு ஊழியர்களிடம் பேசும் வெளிநாட்டு ஊழியர்கள் நிலையத்தின் நிர்வாக இயக்குநர் பெர்னார்ட் மேனன் (வலக்கோடி). படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கொரோனா கிருமித்தொற்றுக்காக சிகிச்சை முடிந்து மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கையை, கிருமித்தொற்றால் உயிரிழந்தவர்கள் எனத் தவறாக நினைத்துக்கொண்டு பதற்றப்படுவோர் சிலர்; சிங்கப்பூர் பயணிகளுக்கு தாயகம் திரும்ப பயணக் கட்டுப்பாடு விதிக்கப்படும் அச்சத்தில் அவசரகதியில் வேலையை விட்டுவிடுவோர் சிலர்.

சிங்கப்பூரில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்களில் சிலர் எதிர்நோக்கும் இதுபோன்ற பொய்ச் செய்திகளால் பரவலாக ஏற்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண விரும்பியது வெளிநாட்டு ஊழியர்கள் நிலையம்.

இந்தப் பணிக்கு உதவ, தங்களது தொண்டூழியர்களாக சேவையாற்றும் வெளிநாட்டு ஊழியர்களின் உதவியையே நாடியுள்ளது அந்த நிலையம். துல்லியமான தகவல்களைச் சரியான நேரத்தில் மற்ற ஊழியர்களுக்கு வழங்கும் பணியில் அவர்கள் ஈடுபடுகின்றனர்.

39 வயது பங்ளாதேஷ் ஊழியர் ஒருவருக்கு கடந்த மாதம் கிருமித்தொற்று ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டதையடுத்து, பல பங்ளாதேஷ் ஊழியர்கள், தன்னைத் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு உடனடியாக தாயகம் திரும்ப விரும்புவதாகக் கூறியதை நினைவுகூர்ந்தார் வெளிநாட்டு ஊழியர்கள் நிலையத்தின் நிர்வாக இயக்குநர் பெர்னார்ட் மேனன்.

வெளிநாட்டு ஊழியர்களுடன் தளத்தில் மிகவும் நெருக்கமாக இருந்து அவ்வப்போது சரியான தகவல்களைத் தெரிவிக்க உகந்த ஆட்கள் தேவைப்பட்டனர்.

நிலையத்தின் முதன்மைக் குழுவில் இருப்பவர்கள் 25 பேர் மட்டுமே; ஆனால், சுமார் 125,000 வெளிநாட்டு ஊழியர்களுடன் தொடர்புகொண்டு உண்மையான நிலவரத்தை விளக்க இந்த 25 பேர் மட்டும் போதாது.

ஆனால், 5,000 வெளிநாட்டு ஊழியர் தூதுவர்களைக் கொண்டுள்ளது நிலையம். அவர்களின் உதவியுடன் கொரோனா தொற்றுப் பரவல் காலத்தில் பொய்ச் செய்தியால் ஏற்படும் பிரச்சினைகளைக் கையாள முடிவெடுத்தது நிலையம்.