மக்களை ஈர்க்க உணவு விலையைக் குறைத்துள்ள சைனாடவுன் கடைக்காரர்கள்

மக்களை ஈர்க்க உணவு விலையைக் குறைத்துள்ள சைனாடவுன் கடைக்காரர்கள்

2 mins read

சிங்கப்பூரில் கொவிட்-19 கிருமி பரவல் காரணமாக கூட்டமான இடங்களை மக்கள் தவிர்த்துள்ள வேளையில், சைனாடவுன் காம்ப்ளெக்ஸ் உணவு நிலையத்தில் 80 விழுக்காடு வரை வியாபாரம் சரிந்திருப்பதாக கடைக்காரர்கள் புலம்பியிருந்தனர்.

எனினும், வாடிக்கையாளர்களை ஈர்க்கும் முயற்சியாக உணவு விலைகளைக் குறைக்க அவர்கள் எடுத்துள்ள முடிவுக்குப் பலன் கிடைத்துள்ளதாக தெரிகிறது.

சைனாடவுன் காம்ப்ளெக்ஸ் உணவு நிலையத்தில் இயங்கும் 226 உணவுக் கடைகளில் சுமார் 130 கடைகள் உணவு விலையைக் குறைத்துள்ளன.

உதாரணத்திற்கு, அங்கு விற்கப்படும் மூலிகை பானங்களின் விலை 10 விழுக்காடு குறைக்கப்பட்டுள்ளது. சில கடைகளில் விற்கப்படும் 'ஹாக்கியன் மீ', ஒரு தட்டைக்கு $4 அல்லது $6க்கு விற்கப்படுகிறது. வழக்கமான விலையைவிட இது $1 குறைவு.

உணவு விலை குறைக்கப்பட்டிருப்பதை அடுத்து, 10 முதல் 20 விழுக்காடு வரை வியாபாரம் கூடியிருந்தாலும், சனிக்கிழமைகளில் வழக்கமாக காணப்படும் கூட்டத்தைவிட நேற்று பாதியளவு கூட்டம் மட்டுமே காணப்பட்டதாக கடைக்காரர் ஜான்னி தங் கூறினார்.

நேற்று மதிய உணவு இடைவேளையின்போது சைனாடவுன் காம்ப்ளெக்ஸ் உணவு நிலையத்திற்கு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்திக்குழு சென்றபோது, அங்கு ஒருசில காலி மேசைகள் இருந்ததைக் காண முடிந்தது. பல கடைகளில் உணவு வாங்குவதற்காக மக்கள் வரிசை காணப்பட்டது. சுற்றுப்பயணிகள் அதிகமானோரின் வருகையைச் சார்ந்திருக்கும் சைனாடவுன் பகுதியில் வியாபாரம் நலிவடைந்திருப்பதாக 'சிக்கன் ரைஸ்' உணவுக் கடை நடத்தும் திருவாட்டி கொனி சான், 49, சொன்னார்.

கொரோனா கிருமித்தொற்றால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள சீனா, தென்கொரியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து சிங்கப்பூருக்கு வருபவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதை அடுத்து, இங்குள்ள சுற்றுலாத் தளங்கள் உள்ளிட்ட பல இடங்களில் வியாபரம் கணிசமாக சரிந்துள்ளது. உள்ளூர்வாசிகளும் கூட்டமான இடங்களை தவிர்க்கின்றனர்.

இந்நிலையில், உணவு உண்ணும் பகுதிகளைச் சுத்தமாக வைத்திருப்பதில் சைனாடவுன் காம்ப்ளெக்ஸ் உணவு நிலையச் சங்கம் அதன் பங்கை ஆற்றி வருவதாக அதன் தலைவர் லிம் கெக் மெங் தெரிவித்துள்ளார். இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை துப்புரவாளர்கள் கிருமி நாசினிகளைக் கொண்டு இடத்தைச் சுத்தப்படுத்துவதை அவர் சுட்டினார். முன்னதாக, ஒரு நாளுக்கு ஒருமுறை மட்டுமே அவ்வாறு செய்யப்பட்டது.