வரவுசெலவுத் திட்டத்தின் மீதுள்ள நாட்டின் கவனத்தைத் தற்போதைய கொவிட்-19 நிலவரம் சற்று திசைத்திருப்பி இருந்தாலும் அதனைச் சமாளித்தவாறே எதிர்கால தேவை களுக்கும் திட்டமிட வேண்டும் என்று போக்குவரத்து, தொடர்பு, தகவல் அமைச்சுகளின் மூத்த துணை அமைச்சர் டாக்டர் ஜனில் புதுச்சேரி தெரிவித்தார்.
மக்கள் கழக நற்பணிப் பேரவையின் ஆலோசகருமான டாக்டர் ஜனில், இம்மாதம் 5ஆம் தேதியன்று வாழ்நாள் கற்றல் கழகத்தில் நடந்த வரவுசெலவுத் திட்டம் தொடர்பான கலந்துரையாடலில் இவ்வாறு கூறினார். மக்கள் கழக நற்பணிப் பேரவையின் ஏற்பாட்டில் நடந்த இந்நிகழ்ச்சியில் தீவு முழுவதுமுள்ள இந்தியர் நற்பணிச் செயற்குழுக் களிலுள்ள சுமார் 180 அடித்தள உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
தமது வரவேற்புரையில் டாக்டர் ஜனில், கொவிட்-19 நிலவரம் குறித்து 3 அம்சங்களைப் பற்றி யோசிக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். முதலாவதாக, நமது சுகாதார செயல்முறைகள் நம் ஆரோக்கியம் பேணிக் காக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கிருமித்தொற்று மேலும் பரவாமல் இருக்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட வேண்டும் என்றும் கூறினார். அத்துடன் வரவுசெலவுத் திட்டத்தில் சுகாதார செயல்முறைகளுக்கும் சுகாதார ஊழியர்களுக்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார்.
சிங்கப்பூரர், வெளிநாட்டு ஊழியர், சுற்றுப்பயணி எனப் பிரித்துப் பார்க்காமல் கொவிட்-19 தொடர்பிலான தரமான சிகிச்சை இங்கு அனைவருக்கும் வழங்கப்படுவதில் கவனம் செலுத்தப்படுகிறது.
கொரோனா கிருமித்தொற்று தொடர்பான அச்சங்களை நேர்மறையாக்க நம் போக்கில் மாற்றங்கள் தேவைப்படுகிறது என்பதை அமைச்சர் இரண்டாவது அம்சமாக குறிப்பிட்டார்.
உதாரணத்திற்கு, மக்கள் போகும் இடங்களை அனைவரும் சுத்தமாக வைத்திருத்தல், வழியில் குப்பை போடாமல் இருத்தல், உடல் நலம் சரி இல்லையென்றால் வீட்டில் இருத்தல், இவையெல்லாம் அச்சங்களைப் போக்கிச் சமூக மீள்திறனை வலுவாக்க உதவுகின்றன என்றார்.
இறுதி அம்சமாகப் பொருளாதார பாதிப்புக்கு ஆளானவர்களுக்குத் தோள் கொடுப்பதன் அவசியத்தை அவர் விளக்கினார்.
தற்போது டாக்சி ஓட்டுநர்கள், தனியார் வாடகை கார் ஓட்டுநர்கள் போன்றவர்களின் வருமானம் சுமார் 30 விழுக்காடு வரை சரிந்துள்ள நிலையில், பெட்ரோல், வாகன வாடகையைச் செலுத்த இவர்கள் பிரச்சினைகளை எதிர்நோக்கலாம் என்று கூறினார் டாக்டர் ஜனில். நிலைமையைச் சமாளிப்பதற்கான ஆதரவுத் திட்டத்தை அரசாங்கம் அண்மையில் அறிவித்தது என்றார்.
அமைச்சரின் வரவேற்புரையை அடுத்து கலந்துரையாடல் அங்கம் நடைபெற்றது. அதில் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவினம், பொருள் சேவை வரி அதிகரிப்பின் தள்ளிவைப்பு, ஸ்கில்ஸ்ஃபியூச்சர் பயிற்சித் திட்டத்திற்குத் தகுதி பெறும் வயது வரம்பு, வெவ்வேறு வருமானம் கொண்டவர்களிடையே வரவுசெலவுத் திட்ட அனுகூலங்கள் வேறுபடுகின்றன போன்ற விவகாரங்கள் தொடர்பான கேள்விகள் எழுந்தன. நடுத்தர வருமானத்தினரின் தேவைகள் இவ்வாண்டின் வரவுசெலவுத் திட்டத்தில் முழுமையாக பூர்த்தியாகாததற்குக் காரணம் என்ன என்று அமைச்சரிடம் ஒருவர் விளக்கம் கேட்டார்.
பொதுவாக குறைந்த வரு மானம் ஈட்டும் குடும்பங்களுக்கு நேரடியாக உதவுவதில் கவனம் செலுத்தப்படுகிறது என்றும் நடுத்தர வருமானம் கொண்டவர்களுக்கு நல்ல வேலைகள் கிடைக்க மற்ற வகைகளில் அரசாங்கம் உதவி வருவதாகவும் டாக்டர் ஜனில் பதிலளித்தார்.
சிங்கப்பூரின் எதிர்காலத் தேவைகளுக்கு இணங்க வரவு செலவுத் திட்டத்தில் இடம்பெறும் ராணுவ, உள்துறைப் பாதுகாப்பு, கல்வி, போக்குவரத்து முதலீடுகள் திட்டமிடப்பட்டன என்று சுட்டினார் டாக்டர் ஜனில். கொரோனா கிருமித்தொற்று போனதும் சீக்கிரம் வழக்க நிலைக்குத் திரும்புவதில் கவனம் செலுத்த வேண்டும் என்ற கருத்தையும் பகிர்ந்துகொண்டார் அமைச்சர் ஜனில்.
படம்: நற்பணிப் பேரவை

