மலேசிய சமயப் பள்ளி ஆசிரியர் சிங்கப்பூர் இளைஞனைக் காலணியால் அடித்த சம்பவம்

மலேசிய சமயப் பள்ளி ஆசிரியர் சிங்கப்பூர் இளைஞனைக் காலணியால் அடித்த சம்பவம்

2 mins read
c1bc259b-09b5-486d-8459-bc5778e6c27a
-

மகன் இமானின் (படம்) விருப்பத்திற்கு இணங்க ஒற்றைப் பெற்றோரான திருவாட்டி நூரிடாயு ஸைனுடின், 40, அவனை சிலாங்கூரிலுள்ள இஸ்லாமிய சமயப் பள்ளியில் சேர்த்தார். மகனின் 14வது பிறந்தநாளுக்கு அவனைச் சென்று பார்த்த அந்தத் தாயாருக்கு அதிர்ச்சி. மகனுடைய முகத்தின் இடது பக்கம் வீங்கி இருந்தது. அத்துடன் இமானுக்குக் காய்ச்சலும் அதிகமாக இருந்தது.

விசாரித்ததில் பள்ளி ஆசிரியர் ஒருவர் தம் காலணியைக் கொண்டு இளைஞனின் முகத்தில் அடித்திருந்தது தெரியவந்தது.

பள்ளி நண்பனுடன் வாக்கு வாதம் ஏற்பட்டு அது கைகலப்பாக மாறியதை அடுத்து இமான் பள்ளி யின் மூத்த ஆசிரியர் ஒருவரிடம் அடி வாங்கியதாக கூறப்பட்டது. அதையடுத்து இமானுக்குக் காய்ச்சல் ஏற்பட்டதுடன் சரியாக சாப்பிடவும் முடியவில்லை. முகத்தின் இடது பக்கம் வீங்கியதுடன் கண்ணில் நீரும் வரத் தொடங்கியது. தன் தாயாரிடம் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பேச வேண்டும் என்று இமான் கேட்டபோது அவனின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

திருவாட்டி நூரிடாயு கேகே மகளிர், சிறார் மருத்துவமனைக்கு இமானை அழைத்துச் சென்றார். மகனுக்குக் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் அவரிடம் கூறினர். மூக்குக்கும் கண்ணுக்கும் இடையே உள்ள எலும்பு முறிந்துள்ளதால் உடனே அறுவை சிகிச்சை செய்தாக வேண்டுமென்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து ஓர் ஆசிரியர் இமானைக் காலணியால் அடித்ததை ஒப்புக்கொண்டுள்ளதாக அப்பள்ளி முதல்வர் திருவாட்டி நூரிடாயுவிடம் தெரிவித்தார். ஆசிரியர் வேலையிலிருந்து நீக்கப்பட்டதுடன் பள்ளியும் மலேசிய அதிகாரிகளும் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளதாகவும் கூறப்பட்டது.