சிங்கப்பூரில் மேலும் எட்டுப்பேருக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டதாக சுகாதார அமைச்சு நேற்று மாலை வெளியிட்ட தகவலில் தெரிவித்தது. இவர்களையும் சேர்த்து சிங்கப்பூரில் பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை 138 ஆனது. சிகிச்சை பெற்று வந்தவர்களில் எட்டுப் பேர் வீடு திரும்பிவிட்டதாகவும் அமைச்சு கூறியது. மொத்தமாக இதுவரை 90 பேர் கிருமித்தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
புதிதாக நேற்று அறிவிக்கப்பட்ட நோயாளிகளுள் நால்வர் சாஃப்ரா ஜூரோங் விருந்து நிகழ்ச்சியுடன் தொடர்புடையவர்கள். தற்போது மருத்துவமனைகளில் இருக்கும் 48 பேரில் எட்டுப் பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதற்கிடையே, பிரதமர் லீ சியன் லூங் நேற்று மாலை தமது ஃபேஸ்புக் பதிவில் ஒரு தகவலை வெளியிட்டுள்ளார். புதிதாக அறிவிக்கப்பட்ட கிருமித்தொற்று நோயாளிகளில் ஒருவர் டெக் கீ வசிப்போர் குழு வட்டாரம்-ஜே நடத்திய நிகழ்வுகளில் தொடர்ந்து பங்கேற்று வந்ததாகவும் எனவே வட்டாரம்-ஜே குழு உறுப்பினர்
களிடம் விவரம் அறிவதற்காக சுகாதார அமைச்சு அணுகினால் ஒத்துழைப்பு வழங்கி அதிகாரிகளிடம் முழுமையான தகவல்களைப் பரிமாறும்படியும் பிரதமர் அந்தப் பதிவில் வலியுறுத்தி உள்ளார்.

