அடுத்த பொதுத் தேர்தலுக்கான பெண் வேட்பாளர்களை மக்கள் செயல் கட்சி அடையாளம் கண்டுள்ளது என்றும் கூடிய விரைவில் அவர்கள் பொதுமக்களுக்கு அறிமுகம் செய்து வைக்கப்படுவர் என்றும் நேற்று மனிதவள அமைச்சர் ஜோசஃபின் டியோ கூறினார்.
மக்கள் செயல் கட்சியின் மகளிர் அணி ஏற்பாடு செய்திருந்த அனைத்துலக மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கு வருகை அளித்திருந்த ஆர்வலர்கள் மற்றும் நகர மன்ற துப்புரவாளர்களின் பிரதிநிதிகளிடம் இவ்வாறு தெரிவித்தார் திருவாட்டி டியோ.
"சக சிங்கப்பூரர்களுக்குப் பங்காற்றும் ஆர்வமுள்ள பெண் வேட்பாளர்களை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம். தேர்ந்தெடுத்த துறைகளில் அவர்கள் சிறந்து விளங்குகின்றனர். கூடிய விரைவில் அவர்களை நாங்கள் அறி முகம் செய்து வைப்போம். அத்துடன் குடியிருப்பாளர்களுக்குப் பணியாற்ற அவர்களுக்கு நாங்கள் ஆதரவும் அளிப்போம்," என்றார் அமைச்சர் டியோ.
மக்களுக்கு எழக்கூடிய கவலைகள் குறித்து வெவ்வேறு அமைப்புகளுடன் கூடுதல் பங்காளித்துவ உறவுகளை ஏற்படுத்த வேட்பாளர்களின் பலதரப்பட்ட பின்னணிகள் உதவும் என்று மசெக மகளிரணித் தலைவியுமான திருவாட்டி டியோ சொன்னார்.
தாம் 2006ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்திற்குள் முதன்முதலில் அடியெடுத்து வைத்தபோது மசெகவில் இருந்த பெண்களின் எண்ணிக்கையைவிட இப்போது கூடுதலாக உள்ளனர் என்றும் அமைச்சர் டியோ தம் உரையில் குறிப்பிட்டார்.
மசெகவின் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் பன்முகத்தன்மையில் வளர்ச்சி காண்பதுடன் நாடாளுமன்றத்தில் பெண் களின் முக்கிய பங்கு தொடர்ந்து இருக்கும் என்பதில் நம்பிக்கை தெரிவித்தார் திருவாட்டி டியோ.
தலைமைத்துவப் பொறுப்புகளில் சாதித்துள்ள பெண்களைப் பற்றியும் அவர் பேசியிருந்தார். இன்று ஆறு பெண் நிரந்தரச் செயலாளர்கள் இருப்பதை அவர் உதாரணமாகச் சுட்டினார். தனியார் துறையின் மூத்த நிர்வாகப் பொறுப்புகளில் மூன்றில் ஒரு பங்கினர் பெண்களாக உள்ளதையும் அவர் குறிப்பிட்டார். அத்துடன் பெண்கள் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதுடன் புதுத் திறன்களைக் கற்றுக்கொள்ளவும் திறன் மேம்பாட்டில் ஈடுபடவும் பெண்கள் ஒருவருக்கொருவர் ஊக்குவிக்க வேண்டும் என்றார்.
இவ்வாண்டின் அனைத்துலக மகளிர் தினத்தை முன்னிட்டு மசெக சமூக அறநிறுவனத்துடன் மசெக மகளிர் அணி இணைந்து சிறப்புப் பொட்டலங்களைத் தயாரித்துள்ளது என்றும் பகிர்ந்துகொண்டார். நன்றி தெரிவிக்கும் வகையில் கிட்டத்தட்ட 5,000 வீவக குடியிருப்பு வட்டாரத் துப்புர வாளர்களுக்கு இப்பொட்டலங்கள் வழங்கப்படும்.

