உயர்ந்த சுகாதாரத் தரத்தைப் பேணும் உணவுக்கடைகளுக்குச் சான்றிதழ்

உயர்ந்த சுகாதாரத் தரத்தைப் பேணும் உணவுக்கடைகளுக்குச் சான்றிதழ்

2 mins read
e8df8935-8135-4923-a63e-ca472d45ebc9
'எஸ்ஜி தூய்மை' தரநிலையை எட்டிய உனவுக்கடை உரிமையாளர் ஒருவருக்கு அதற்கான வில்லையை வழங்குகிறார் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் (வலமிருந்து 2வது). அவருக்கு இடது புறம் இருப்பவர் தெம்பனிஸ் குழுத்தொகுதி எம்.பி. செங் லீ ஹுய். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சுகாதாரத் தரநிலைகளை உயர்த்து வதற்கான புதிய வழிகாட்டி நெறிமுறைகளை உணவங்காடி நிலையங்களில் உள்ள உணவுக்கடைகள் பின்பற்றி வருகின்றன.

புதிய தரநிலைகளுக்கு ஏற்ப சுகாதாரத்தையும் துப்புரவையும் பேணி வரும் 2,100 உணவுக்கடைகளுக்கும் 400 காப்பிக்கடைகளுக்கும் புதிய 'எஸ்ஜி தூய்மை' சான்றிதழ் வழங்கப்பட்டிருப்பதாக சிங்கப்பூர் உணவு அமைப்பு நேற்று தெரிவித்தது.

உணவு சமைக்கும் இடங்களையும் சாதனங்களையும் தூய்மையாக வைத்திருத்தல், கழிவுகளை முறையான வழிகளில் கையாளுதல், ஊழியர்களின் சுகாதாரத்தைக் கண்காணித்து வருதல் ஆகியவற்றை உறுதிப்படுத்தும் செயல்முறைகளை நடைமுறைப்படுத்தியுள்ள உணவுக்கடைகளுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.

கொரோனா கிருமித்தொற்றை அடுத்து, தூய்மையைப் பேணி, பொதுச் சுகாதாரத்தைப் பாதுகாக்கும் நோக்கில் கடந்த மாதம் 16ஆம் தேதி எஸ்ஜி தூய்மை இயக்கம் தொடங்கப்பட்டது.

துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட்டும் தெம்பனிஸ் குழுத்தொகுதி எம்.பி. செங் லீ ஹுய்யும் அந்த வட்டாரத்தில் உள்ள எட்டு உணவுக்கடைகளுக்கும் ஒரு காப்பிக்கடைக்கும் 'எஸ்ஜி தூய்மை' வில்லைகளை நேற்று வழங்கினர்.

"உயர்ந்த தரத்தில் தூய்மையும் சுகாதாரமும் பேணப்படுவதாக குடியிருப்பாளர்கள் கருதும் பட்சத்தில், அவர்கள் வெளியிடங்களுக்கு வந்து சென்று, முடிந்த அளவிற்கு இயல்பான வாழ்க்கையைத் தொடருவர்," என்றார் நிதியமைச்சருமான திரு ஹெங்.

கொரோனா கிருமித்தொற்றின்போது மட்டும் இப்படி மேம்பட்ட சுகாதாரத் தரநிலைகள் நடப்பில் இருக்காமல் அவை புதிய நெறிமுறைகளாக உருமாற வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

"நமது அக்கம்பக்கத்திலும் சிங்கப்பூரிலும் தூய்மை, சுகாதாரத் தரநிலைகளை மேம்படுத்த இந்தச் சூழலை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்," என்றார் துணைப் பிரதமர்.

சான்றிதழ் பெற்ற உணவுக்கடைகளுள் ஒன்றில் பணியாற்றி வரும் திரு எங் கான் போ, 29, கூறுகையில், "வாடிக்கையாளர்களின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டே இதையெல்லாம் செய்கிறோம். இதன்மூலம் கிருமியை அண்டாமல் பாதுகாப்பதுடன் உணவு நஞ்சாக மாறுவதையும் தடுக்க முடியும்," என்றார்.

பத்துக்கும் மேற்பட்ட துப்புரவாளர்களின் சேவைகளை மெச்சி, திரு ஹெங்கும் திருவாட்டி செங்கும் அவர்களுக்கு 'பராமரிப்புத் தொகுப்பு'களை வழங்கினர்.

"கொரோனா கிருமி பரவத் தொடங்கியதில் இருந்து எங்களுடைய துப்புரவாளர்கள் தங்களின் முயற்சிகளை முடுக்கிவிட்டுள்ளனர். இதனால் அவர்களின் கடின உழைப்பு இரட்டிப்பாகியுள்ளது. அத்துடன், கிருமி அவர்களைத் தாக்கும் அபாயமும் அதிகம் என்பதால் அவர்களுக்கு எங்களின் பாராட்டுகளை இந்த வகையில் வெளிக்காட்ட விரும்புகிறோம்," என்று தெம்பனிஸ் நகர மன்றத்தின் பேச்சாளர் கூறினார்.

"நமது பொதுச் சுகாதாரத்தைப் பாதுகாக்க பொதுமக்கள், வர்த்தகச் சமூகத்தினர் எனப் பங்காளிகள் அனைவரின் ஒத்துழைப்பும் தேவைப்படுகிறது. குடியிருப்பாளர்களும் அவர்களின் பங்கை ஆற்றும் பட்சத்தில், அடிக்கடி தொடக்கூடிய இடங்களைச் சுத்தம் செய்து, சுகாதாரத்தைப் பேணுவதில் துப்புரவாளர்கள் கவனம் செலுத்த முடியும்," என்றார் திருவாட்டி செங்.