மகளிர் தினம்; 71 வயது தாய்க்கு 'அன்பான பராமரிப்பாளர்' விருது

மகளிர் தினம்; 71 வயது தாய்க்கு 'அன்பான பராமரிப்பாளர்' விருது

3 mins read
569ff177-da49-42b7-b0b8-1af7dd62573b
'அன்பான பராமரிப்பாளர்' விருதை வென்ற 71 வயது எமலின் ரோம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கடந்த 36 ஆண்டுகளாக வளர்ந்து பெரியவர்களாகியுள்ள சிறப்புக் கவனம் தேவைப்படும் தமது மூன்று பிள்ளைகளை தனியோர் ஆளாக 71 வயது எமலின் ரோம் கவனித்து வருகிறார்.

அதற்காக எந்தவித பாராட்டையும் அவர் எதிர்பார்க்கவில்லை. இதனை, ஒரு தாயின் கடமையாகவே தான் செய்து வருவதாக அவர் கூறினார். அவரது ஓய்வில்லாத அர்ப்பணிப்புக்கு நேற்று அங்கீகாரம் கிடைத்தது.

செம்பவாங் குழுத் தொகுதியில் அனைத்துலக மகளிர் தினத்தையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் திருமதி எமலின் ரோமுக்கு 'அன்பான பராமரிப்பாளர்' எனும் விருது வழங்கப்பட்டது.

"சவாலான பணிதான். ஆனால் ஒரு தாயாக அந்தப் பணியை விட்டுக்கொடுக்க நான் விரும்பவில்லை. அதற்கு அன்பும் பொறுமையும் அவசியம். எனக்கு அவர்கள் சுமையாக இல்லை. அவர்கள் எனக்கு ஏராளமான மகிழ்ச்சியைத் தந்து என்னை தினமும் சிரிக்க வைக்கின்றனர்," என்று திருமதி எமலின் குறிப்பிட்டார்.

தொலைத் தொடர்பு நிறுவனம் ஒன்றில் பணியாற்றிய பிறகு அவர் ஓய்வு பெற்றார். அவரது கணவர் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு காலமானார். திருமதி எமலினுக்கு 34 வயது மற்றும் 36 வயதில் இரட்டையர்கள் உள்ளனர். இருவரும் ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்கள்.

சமூக சேவை அமைப்புகளின் உதவியுடன் இரண்டு பிள்ளை களையும் பராமரிப்பு இல்லத்தில் வைத்து அவர் பராமரித்து வருகிறார்.

நேற்று விருது பெற்றவர்களில் திருமதி எமலினும் ஒருவர். இந்த விருதுக்கு நாற்பது பெண்களின் பெயர்கள் முன்மொழியப்பட்டிருந்தன. திருமதி எமலினின் நண்பர் அவரது பெயரை போட்டிக்கு சமர்ப்பித்திருந்தார். இதே நிகழ்ச்சியில் வாழ்நாள் கற்றல் விருது 70 வயது மோலி ஷுவுக்கு வழங்கப்பட்டது.

சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கத்தின் சேவையாளரான அவர், சமையல், ஓவியம் ஆகிய ஸ்கில்ஸ்ஃபியூச்சர் வகுப்புகளில் சேர்ந்து தேர்ச்சி பெற்றார். உடற்பயிற்சிகளிலும் அவர் தவறாமல் ஈடுபட்டு வருகிறார். நண்பர்கள் மற்றும் மூத்த குடிமக்களின் வீடுகளுக்குச் சென்று தேவையான உதவிகளை அவர் செய்து வருகிறார்.

"நான் சாகசப் பெண் அல்ல, நானும் களைப்பு அடைந்துவிடுவேன். ஆனால் எனது குடும்பம் எனக்கு ஆதரவாக இருப்பதால் என்னால் தொடர்ந்து தொண்டூழி யங்களில் ஈடுபட முடிகிறது. அதே சமயத்தில் என்னால் எல்லாவற்றையும் செய்ய முடிவதை நினைத்து பெருமைப்படுகிறேன்," என்று இரண்டு பேரப்பிள்ளைகளைக் கொண்டுள்ள இல்லத்தரசியான திருமதி ஷு குறிப்பிட்டார்.

தேவாலயத்தில் பணியாற்றும் அவரது 40 வயது மகன் ஜோஷுவா ஷு அவரை விருதுக்கு முன்மொழிந்திருந்தார்.

"என்னுடைய தாய்க்கு கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வமுள்ளது. வயது வரம்பில்லாமல் மற்றவர்களையும் கற்றலுக்கு அவர் ஊக்கமூட்டி வருகிறார்," என்று ஜோஷுவா ஷு சொன்னார்.

கம்போங் அட்மிரால்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பன்முறை பணியாளர், சமூக செல்வாக்காளர் ஆகிய இரு வேறு விருதுகளும் வழங்கப்பட்டன. சாலைக் கண்காட்சியில் சிறு தொழில்களில் ஈடுபட்டு வரும் பெண்கள் உதாரணமாக சுட்டிக்காட்டப்பட்டனர். நடன நிகழ்ச்சி, பலரும் சேர்ந்து செய்யும் உடற்பயிற்சியும் அடிப்படை ஒப்பனை, பூ வேலைப்பாடு ஆகியவை பற்றிய இலவச பயிலரங்குகளும் நடைபெற்றன. சுமார் 800 பேருக்கு மேல் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் செம்பவாங் குழுத் தொகுதியின் அடித்தள ஆலோசகர்களான கல்வி அமைச்சர் ஓங் யி காங், உள்துறை, சுகாதார அமைச்சுகளின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் அம்ரின் அமின் உட்பட பலர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளரான போ லி சான், "நமது சமூகத்தில் தலைசிறந்த பெண்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களை இந்த நிகழ்ச்சியின்வழி கௌரவிக்க விரும்பினோம். இந்தச் சிரமமான காலக்கட்டத்தில் இவர்களுடைய கதை மற்றவர்களை ஊக்கமூட்டும் வகையில் இருக்கும்," என்றார்.