உலகளாவிய மற்றும் அதிக காலம் நீடிக்கக்கூடிய நெருக்கடி நிலைக்குத் தாயாராக இருக்க, அத்தியா வசியமான பொருட்களைச் சேமித்து வைக்கும் கையிருப்புக் கொள்கைகளை சிங்கப்பூர் மறுபரிசீலிக்கும் என்று வர்த்தக தொழில் அமைச்சர் சான் சுன் சிங் தெரிவித்துள்ளார்.
மேலும் ஒரு குறிப்பிட்ட நாடு அல்லது நாடுகளிலிருந்து பொருட்களைத் தருவிக்கும் போக்கைத் தவிர்த்து பல்வேறு நாடுகளிலிருந்து பொருட்கள் தருவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
பெனோய் ரோட்டில் உள்ள என்டியுசி ஃபேர்பிரைஸ் விநியோக மையத்தை நேற்று முன்தினம் சுற்றிப் பார்த்த அமைச்சர், "கடந்த காலத்தில் உள்ளூர் அவசரகாலங் களுக்கும் வட்டார அவசரகாலங் களுக்கும் பொருட்கள் தேசிய அளவில் சேமித்து வைக்கப்படுவது வழக்கமாக இருந்திருக்கலாம்.
"ஆனால், கொரோனா கிருமித்தொற்று உலகை ஆட்டிப் படைத்துக்கொண்டிருக்கும் வேளையில் அவ்வாறு செய்வது சாத்தியமில்லை. வழக்கமாக நமக்கு பொருட்களை வழங்கி வரும் நாடுகளும் இப்போது கிருமித்தொற்று நெருக்கடியால் பாதிக்கப்பட்டிருப் பதால், நாமும் நமது போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும்," என்று விவரித்தார்.
"சிங்கப்பூரின் தொடர் விநியோகத்தை பல்வேறு நாடுகளிலிருந்து பெற்றுக்கொள்ளும்போது, அவை எங்கிருந்து வருகின்றன, அதன் மனிதவளம் எங்கிருந்து வருகிறது, எந்தச் சந்தையிலிருந்து பொருட்கள் வருகின்றன, எந்தக் கப்பல் அந்தப் பொருட்களை இங்கு கொண்டு வந்து சேர்க்கின்றன," போன்ற துல்லிய தகவல்களும் ஆராயப்படும் என்று கூறப்பட்டது.
"சில குறிப்பிட்ட முக்கியமான பொருட்களை எடுத்துக்கொண்டால், அவற்றை உள்ளூரிலேயே உற்பத்தி செய்யும் வழியும் கவனமாக ஆராயப்படும். அப்போதுதான் அந்தப் பொருட்களை அவசரகாலத்தில் நாம் உடனடியாகப் பயன்படுத்திக்கொள்ளலாம்," என்றும் அமைச்சர் சான் விளக்கினார்.
"முன்பெல்லாம் அரிசியை நாம் தாய்லாந்து, வியட்னாம் ஆகிய நாடுகளிலிருந்து பெற்றோம். ஆனால் அதை பன்முகப்படுத்தியதால் இப்போது ஜப்பான், இந்தியா ஆகிய நாடுகளிலிருந்து அரிசியை வாங்குகிறோம்.
"நூடுல்சை எடுத்துக்கொண்டால், அதை நாம் சேமித்து வைத்திருக்க வேண்டியதில்லை. அதற்குப் பற்றாக்குறை ஏற்பட்டால், அதை உள்ளூரிலேயே உற்பத்தி செய்துகொள்ளலாம்," என்று குறிப்பிட்டார் அமைச்சர்.
"தற்போது உலக நாடுகள் குறிப்பிட்ட சில பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுவதைத் தடை செய்துள்ள வேளையில் சிங்கப்பூர் இரண்டு படிக்கு அப்பால் சிந்திக்க வேண்டும்.
"நெருக்கடி ஏற்படும்போது நமக்கு பொருட்களை வழங்க புதிய நாடுகள் பட்டியலைத் தயாரிக்க வேண்டும். இதை நாம் உடனடியாகச் செய்ய முடியாது. முன்கூட்டியே பட்டியலைத் தயாரிக்க வேண்டும்," என்று வலியுறுத்திய அமைச்சர், வெளிநாட்டுச் சந்தைகளிலிருந்து நமக்குத் தேவையான பொருட்களை விரைவில் பெற்று அவற்றை சேகரித்து வைத்த ஃபேர்பிரைஸ் நிறுவனத்தையும் இதர நிறுவனத்தின் ஊழியர்களை யும் பாராட்டினார்.

