நியூட்டன் பகுதியில் உள்ள கூட்டுரிமை வீட்டின் நீச்சல் குளத்திற்குள் நேற்று (ஜனவரி 8) காலை குறைந்தது ஆறு நீர்நாய்கள் புகுந்ததைத் தொடர்ந்து, அந்த நீச்சல் குளம் துப்புரவுப் பணிகளுக்காக மூடப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது. 'பார்க் இன்ஃபீனியா @ வீ நாம்' எனும் பெயர் கொண்ட அந்தக் கூட்டுரிமை வளாகத்தில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. அந்த நீச்சல் குளத்திற்குள் புகுந்த நீர்நாய்களில் ஒன்று தன்னுடன் 'கொய் ஃபிஷ்' எனப்படும் ஒருவகை மீனை எடுத்துக்கொண்டு வந்தது. அந்த மீனை அது கடித்துச் சாப்பிடுவதைப் பார்க்க, நீச்சல் குளத்தில் இருந்த மற்ற நீர்நாய்கள் அதைச் சூழ்ந்திருந்தன. இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட காணொளி ஒன்று இந்த நிகழ்வைக் காட்டியது. நேற்று காலை 8.20 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்ததாக அறியப்படுகிறது. அதையடுத்து, நீச்சல் குளம் இன்று மூடப்பட்டது. இது தொடர்பில் கருத்து கேட்க, ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்திக்குழு தொலைபேசி அழைப்புகள், மின்னஞ்சல் மூலம் அந்தக் கூட்டுரிமை வீட்டின் மேலாளரை அழைக்க முற்பட்டது. ஆனால், அவர் அவற்றுக்குப் பதிலளிக்கவில்லை. நீர்நாய்கள் தனியார் பகுதி ஒன்றுக்குள் அத்துமீறி நுழைந்திருப்பது இது புதிதல்ல. 2018ஆம் ஆண்டில் 'செந்தோசா கோவ்' தனியார் குடியிருப்புப் பகுதியில் உள்ள நீச்சல் குளத்திற்குள் இரு நீர்நாய்கள் நுழைந்தன. அப்பகுதியில் நீர்நாய் தொல்லை ஏற்பட்டது குறித்து அப்போது செய்திகள் வெளியாகியிருந்தன. விலையுயர்ந்த மீன்களைச் சாப்பிடுவதில் நீர்நாய்களுக்கு மிகவும் பிரியம். 2016ஆம் ஆண்டில் செந்தோசா ஹோட்டல் ஒன்று $85,000 மதிப்புள்ள மீன்களை நீர்நாய்களிடம் இழந்தது. நீர்நாயைக் குடியிருப்பு வளாகத்திற்குள் நுழையவிடாமல் இருக்க, வீட்டு உரிமையாளர்களில் சிலர் வளாகத்தைச் சுற்றி கம்பி வலைகளைப் பொருத்தியுள்ளனர்.
குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த நீர்நாய்கள்; நீச்சல் குளம் மூடப்பட்டுள்ளது
2 mins read
நியூட்டன் பகுதியில் உள்ள கூட்டுரிமை வீட்டின் நீச்சல் குளத்திற்குள் நேற்று நீர்நாய்கள் புகுந்து விளையாடின. காணொளியிலிருந்து எடுக்கப்பட்ட படம் -


