நிறுவனங்களுக்கு 2வது உதவித்திட்டம்: அரசு தயார்

2 mins read
1233e517-a84b-4f27-a629-0e31f2f101aa
கொரோனா கிருமித்தொற்று காரணமாகப் பாதிக்கப்பட்டு வரும் நிறுவனங்களுக்கு மேலும் உதவி தேவைப்படுமானால் இரண்டாவது உதவித் திட்டத்தை நடப்புக்குக் கொண்டு வர அரசாங்கம் தயாராக இருக்கிறது என்று துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் அறிவித்து இருக்கிறார். படம்: எஸ்டி -

கொரோனா கிருமித்தொற்று காரணமாகப் பாதிக்கப்பட்டு வரும் நிறுவனங்களுக்கு மேலும் உதவி தேவைப்படுமானால் இரண்டாவது உதவித் திட்டத்தை நடப்புக்குக் கொண்டு வர அரசாங்கம் தயாராக இருக்கிறது என்று துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் அறிவித்து இருக்கிறார்.

இருந்தாலும் நிறுவனங்களுக்கு உதவுவதற்காக அரசாங்கம் இப்போது நடைமுறைப்படுத்தி இருக்கும் $4 பில்லியன் உதவித் திட்டத்தை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள நிறுவனங்கள் முதலில் முயல வேண்டும் என்று அவர் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார்.

கொரோனா கிருமித்தொற்று காரணமாக பல்வேறு தொழில் துறைகளும் எந்த அளவுக்குப் பாதிக்கப்பட்டு இருக்கின்றன என்பதை அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது என்று குறிப்பிட்ட நிதி அமைச்சருமான திரு ஹெங், உருமாறி வரும் தொழில்துறைகளுக்கும் ஊழியர்களுக்கும் இன்னும் சிறந்த முறையில் எப்படி ஆதரவு அளிக்கலாம் என்பது பற்றியும் அரசாங்கம் பரிசீலித்து வருவதாகக் கூறினார்.

கொரோனா கிருமித்தொற்று மிரட்டல் சூழ்ந்துள்ள இப்போதைய காலகட்டத்தில், நிறுவனங்கள் பல வாய்ப்புகளைக் கண்டறிய உதவு வதற்காக பணிக்குழு ஒன்று அமைக்கப்படும் என்றும் துணைப் பிரதமர் அறிவித்தார்.

சீன மொழி சாவ் பாவ் செய்தித்தாள் ஏற்பாடு செய்த வருடாந்திர வரவுசெலவுத் திட்டத்திற்குப் பிந்தைய கருத்தரங்கம் நேற்று கேப்பிட்டல் தியேட்டரில் நடந்தது. அதில் கலந்துகொண்டு பேசிய திரு ஹெங், அந்தப் பணிக் குழுவுக்குத் தானே தலைமை வகிப்பதாகவும் குறிப்பிட்டார்.

மற்ற அமைச்சர்களும் தொழில்துறைத் தலைவர்களும் அதில் இடம்பெற்று இருப்பார்கள். எதிர்கால பொருளியல் மன்றம் என்ற அமைப்பின் கீழ் அந்தப் பணிக்குழு செயல்படும் என்று திரு ஹெங் கூறினார்.

பொருளியல் மெதுவடையும்போது நிறுவனங்களுக்கு ஊக்கமூட்டி, அவற்றின் ஆற்றலைப் பலப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது என்று கூறிய அவர், அந்த நிறுவனங்களின் பொருளியல் உருமாற்றத்திற்கு மேலும் பலம் சேர்க்க வேண்டிய அவசியமும் இருக்கிறது என்று குறிப்பிட்டார்.

பணிக்குழு பற்றிய மேல் விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் திரு ஹெங் கூறினார்.

திரு ஹெங், பிப்ரவரி 18ஆம் தேதி புதிய வரவுசெலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

இப்போதைய சரியில்லாத பொருளியல் சூழலில், நிறுவனங்கள் ஊழியர்களைத் தக்கவைத்துக்கொண்டு அவர்களுக்கு மறு பயிற்சி அளிக்க ஏதுவாக $4 பில்லியன் உதவித் திட்டத்தை துணைப் பிரதமர் அறிவித்து இருந்தார்.

நிறுவனங்கள் உருமாற்றம் காண்பது என்பது நீண்டகால பிரச்சினை என்று கூறிய திரு ஹெங், அதை நிறுவனங்களும் இதர பங்காளிகளும் ஒன்றாகச் சேர்ந்து சமாளித்துவிட முடியும் என்றார்.

இப்போது அமைய உள்ள பணிக்குழு இத்தகைய முயற்சிகளில் ஒன்று என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதில் நிறுவனங்களும் தொழிற்சங்கங்களும் ஒன்றாகச் சேர்ந்து வளங்களைத் திரட்டி ஒன்று மற்றொன்றுக்கு உதவ வேண்டும் என்றும் துணைப் பிரதமர் கேட்டுக்கொண்டார்.