சிங்கப்பூர் சிற்பிகள் நினைவகத்தின் கட்டட வடிவமைப்பு தேர்வு

2 mins read
465873c7-d2c5-4363-ad3f-0b3dbe163423
வெற்றி பெற்ற கெங்கோ குமா அசோசியட்ஸ் நிறுவனமும் உள்ளூரின் K2LD ஆர்க்கிடெக்ட்ஸ் நிறுவனமும் சமர்ப்பித்த கட்டட வடிவ மைப்பில் பெரிய பார்வையாளர்கள் கூடம், ஓர் ஏரி, படத்தில் உள்ள வெளிப்புற அரங்கு போன்ற அம்சங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன. படம்: KENGO KUMA & ASSOCIATES + K2LD ARCHITECTS -

வரும் 2027ஆம் ஆண்டில் மரினா பே தொடுவானம், மற்றொரு புதிய கட்டடத்தின் உள்ளடக்கத்துடன் புதுப்பொலிவு பெற்றிருக்கும்.

சிங்கப்பூரின் முன்னோடித் தலைவர்களின் நினைவாக, புதிதாக அமையவிருக்கும் சிங்கப்பூர் சிற்பிகள் நினைவகத்துக்குப் புதிய கட்டட வடிவமைப்பு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

பே ஈஸ்ட் பூங்காவில் ஐந்து ஹெக்டர் நிலப்பரப்பில் அமையும் இந்தக் கட்டட வடிவமைப்பை ஜப்பானின் கெங்கோ குமா அசோசியட்ஸ் நிறுவனமும் உள்ளூரின் K2LD ஆர்க்கிடெக்ட்ஸ் நிறுவனமும் கூட்டாகச் சமர்ப்பித்தன.

அந்த வடிவமைப்புதான் வெற்றி பெற்றதாக நேற்று எழுவர் கொண்ட தேர்வுக் குழுவால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

"போட்டிக்குச் சமர்ப்பிக்கப்பட்ட இதர நான்கு வடிவமைப்புகளை விட கெங்கோ குமா அசோசியட்ஸ் நிறுவனமும் உள்ளூரின் K2LD ஆர்க்கிடெக்ட்ஸ் நிறுவனமும் சமர்ப்பித்த வடிவமைப்பில் சிங்கப்பூர் சிற்பிகளின் உணர்வுகளும் பண்புநெறிகளும் பிரதிபலித்தன. அதன் பசுமை வனப்பை உள்ளடக்கிய உன்னத வடிவமைப்பு வருகையாளர்களைச் சுண்டி இழுக்கும் தன்மை கொண்டதாக இருந்தது," என்று எழுவர் கொண்ட தேர்வுக் குழுவுக்குத் தலைமை தாங்கிய திரு லீ சு யாங் தெரிவித்தார்.

சிங்கப்பூர் சிற்பிகள் நினைவகத்தின் கட்டுமானப் பணிகள் 2022ஆம் ஆண்டில் தொடங்கும்.

அதற்கு அருகில், தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதையில் 'சிங்கப்பூர் சிற்பிகள் நினைவகம்' என்ற பெயர் கொண்ட எம்ஆர்டி நிலையமும் அமைக்கப்படும்.

சிங்கப்பூர் சிற்பிகள் நினைவகத்துக்கு அனைத்துலக அளவிலான சிறந்த கட்டட வடிவமைப்பு தேவை எனும் நோக்கத்தில் அனைத்துலக கட்டட வடிவமைப்பு போட்டிக்குச் சமர்ப்பிப்புகள் வரவேற்கப்பட்டன.

அதற்கு உள்ளூரிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் 193 சமர்ப்பிப்புகள் கிடைக்கப்பெற்றன.

அதிலிருந்து ஐந்து இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றன. அதில் எது தங்களுக்குப் பிடித்தது என்பதை அறிய கடந்த ஆண்டு இறுதியில் அவை பொதுமக்களின் பார்வைக்கு நகரும் கண்காட்சி மூலம் வைக்கப்பட்டன.

அந்தக் கண்காட்சியில் கலந்துகொண்ட சுமார் 50,000 பேர் தங்களுக்குப் பிடித்த வடிவமைப்பு எது என்பதைத் தெரிவித்தனர். அதையும் கருத்தில் கொண்டு தேர்வுக்குழு ஐந்து வடிவமைப்புகளில் சிறந்ததைத் தேர்வு செய்தது.