அரும்பொருளகங்களுக்குச் செல்லும் மாணவர்களுக்கு மேம்பட்ட கற்றல் அனுபவம்

அரும்பொருளகங்களுக்குச் செல்லும் மாணவர்களுக்கு மேம்பட்ட கற்றல் அனுபவம்

2 mins read
94777a30-5ad4-455c-a26d-573944a1807b
அரும்பொருளக வழிகாட்டி அதிகாரி திருமதி ஷோபனா அங்கு வரும் மாணவர்களுக்கு சிங்கப்பூர் வரலாறு தொடர்பான தகவல்களைச் சுவாரசியமான முறையில் விளக்குகிறார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

முன்பெல்லாம் மாணவர்கள் அரும்பொருளகத்திற்குச் சென்றால், அவர்கள் அங்கிருக்கக்கூடிய வழிகாட்டி அதிகாரியைப் பின்தொடர்ந்துதான் அரும்பொருளகம் முழுவதும் ஒரு கூட்டமாகச் செல்லவேண்டும்.

ஒவ்வொரு காட்சிப்பொருளாக அந்த அதிகாரி விளக்கிக்கொண்டு செல்ல, மாணவர்களும் குழுவாக அவருக்குப் பின்னால் செல்ல வேண்டும்.

ஆனால் இன்று அரும்பொருளகத்திற்குச் செல்லும் மாணவர்களின் கற்றல் அனுபவம் சற்று மாறுபட்டு இருக்கும்.

மாணவர்கள் தங்கள் அரும்பொருளகத்தினுள் குழுவாகச் செல்லத் தேவையில்லை. மாறாக, அவரவர் விரும்பும் பகுதிகளுக்குச் சுதந்திரமாகச் செல்லலாம்.

ஒரு குறிப்பிட்ட காட்சிப்பொருளைப் பற்றி அவர்கள் ஆராயும் வேளையில் அது குறித்த மேல் விவரம் பெற விரும்பினால் அங்கு காட்சிப் பொருள் அருகே செயல்படும் வழிகாட்டி அதிகாரிகளில் ஒருவரை அணுகினால் அவர் விளக்கம் தர தயாராக இருப்பார்.

இங்குதான் 67 வயது திருமதி ‌ஷோபனா சியோங்கின் பங்கு அடங்கியுள்ளது.

கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு மேல் ஆங்கில மொழி ஆசிரியராக இருந்த இவர், பணியிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு ஒரு தொண்டூழிய வழிகாட்டி அதிகாரியாக சிங்கப்பூர் தேசிய அரும்பொருளகத்தில் செயல்பட்டு வருகிறார்.

ஒரு வழிகாட்டி அதிகாரியான இவர் காட்சிப்பொருளைப் பற்றிய பின்னணியை சுவாரசியமான முறையில் ஒரு கதையாக விளக்குகிறார்.

அதன் வழி, மாணவர்கள் பள்ளிப் புத்தகத்தில் படித்ததைத் தொடர்புபடுத்த முடிகின்றது, வரலாற்றைப் பற்றி ஆழமாக சிந்திக்க இது தூண்டுகிறது.

இவ்வாண்டு தேசிய மரபுடைமைக் கழகமும் கல்வி அமைச்சும் இணைந்து இந்த வேறுபட்ட மாணவர் கற்றல் அனுபவத்தை இரு இடங்களில் வழங்கவுள்ளன.

ஆசிய நாகரிக அரும்பொருளகத்திலும் சிங்கப்பூர் தேசிய அரும்பொருளகத்திலும் எல்லா தொடக்கநிலை ஆறாம் வகுப்பு, உயர்நிலை இரண்டாம் வகுப்பு மாணவர்களும் இந்தக் கற்றல் அனுபவத்தில் பங்கேற்பர்.

இளைய தலைமுறையினர் நமது மரபுடைமையை அறிந்துகொள்ளவும் நமது வரலாற்றைப் புரிந்துகொள்வதோடு வட்டார அளவிலும் உலக அளவிலும் சிங்கப்பூரின் தொடர்புகளைப் பற்றி தெரிந்துகொள்வதும் இந்தக் கற்றல் பயணத்தின் நோக்கங்களாகும்.

பண்பியல்பு மற்றும் குடியுரிமைக் கல்வியும், சமூகவியல் பாடம், வரலாறு என பள்ளிகளில் மாணவர்கள் பயிலும் பாடங்களின் கற்றலை முழுமைப்படுத்தும் விதத்தில் இந்த அரும்பொருளக கற்றல் அனுபவம் விளங்கும்.

"ஒரு சிங்கப்பூரராக நமது மரபுடைமையை இளைய தலைமுறையினருக்கு கொண்டு செல்வது முக்கியம். ஏனெனில் நமது அடையாளம், கலாசாரம், பண்புநலன்கள் இவற்றில் அடங்கியுள்ளன," என விளக்கினார் இளையர்களுடன் வரலாற்று அம்சங்களைப் பகிர்ந்துகொள்வதில் இன்பம் காணும் திருமதி ‌ஷோபனா.

"தெரியாத வி‌‌வரங்களை மாணவர்கள் சிறிய குழுக்களாக வழிகாட்டி அதிகாரியிடம் கேட்டு தெரிந்துகொள்ளும்போது தங்களது கற்றலில் அவர்கள் உரிமையெடுத்துக்கொள்கிறார்கள்.

"மேலும் அவர்கள் காணும் காட்சிப்பொருட்கள் நம் முன்னோர்களின் தியாகங்களை உணர்வுபூர்வமாக மாணவர்களுக்கு நினைவுபடுத்துகின்றன என்றும் கூறுகிறார் வழிகாட்டி அதிகாரி திருமதி ‌ஷோபனா.