இத்தாலிய கப்பலில் இருந்து 600 பயணிகள் வெளியேறினர்

இத்தாலிய கப்பலில் இருந்து 600 பயணிகள் வெளியேறினர்

2 mins read
93dff4fa-4add-4dc7-aac8-56b2c5be068f
இத்தாலிய உல்லாசக் கப்பலிலிருந்து நேற்று வெளியேறிய பயணிகள், பேருந்து மூலம் ஹோட்டல்கள் அல்லது நாடு திரும்ப விமான நிலையத்திற்கு செல்ல இருந்தனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கொவிட்-19 கிருமித்தொற்று அச்சத்தால் மலேசியாவும் தாய்லாந்தும் தங்களது எல்லைக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட உல்லாசக் கப்பல் ஒன்று நேற்று காலை சிங்கப்பூர் திரும்பியது. நேற்று நண்பகல் நிலவரப்படி, அக்கப்பலிலிருந்து 600க்கும் அதிகமான பயணிகள் வெளியேறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'கோஸ்டா ஃபோர்ச்சுனா' எனும் பெயர்கொண்ட அந்த இத்தாலியக் கப்பலில் இருந்த அனைவரும் நலமாக இருப்பதாக தெரியவந்துள்ளது. கடந்த இரு வாரங்களில், கிருமித்தொற்றால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்குச் சென்ற பயணிகளை மருத்துவர்கள் தனித்தனியாக பரிசோதித்தனர். பயணம் மேற்கொள்ள அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு, சிங்கப்பூர் பயணத்துறை வாரியம், கடற்துறை துறைமுக ஆணையம் ஆகியவை நேற்று தெரிவித்தன.

தங்களது நாடுகளுக்கு திரும்புவதற்காக அந்தப் பயணிகள் பின்னர் விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். வேறு சிலர் ஹோட்டல்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

கடந்த வியாழக்கிழமை காலை 6 மணிக்கு அந்த உல்லாசக் கப்பல், பயணிகளின் சுகாதாரநிலை குறித்த அறிக்கையைச் சமர்ப்பித்திருந்ததாக மேற்கூறப்பட்ட மூன்று அமைப்புகளும் தெரிவித்தன. அதில், தனது பயணிகள் எவருக்கும் காய்ச்சல் அல்லது சுவாசப் பிரச்சினைக்கான அறிகுறி எதுவும் தென்படவில்லை என அக்கப்பல் தெரிவித்திருந்தது. சுகாதார அமைச்சின் உரிமம் பெற்ற மருத்துவக் குழு ஒன்று கப்பலில் இருந்த அனைத்து பயணிகளையும் பணியாளர்களையும் கூடுதல் பரிசோதனைக்கு உட்படுத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

"கப்பலில் இருந்த கிட்டத்தட்ட அனைத்து வெளிநாட்டுப் பயணிகளும் அடுத்த இரு நாட்களுக்குள் சிங்கப்பூரிலிருந்து தத்தம் நாடுகளுக்குப் புறப்படுவர்," என்று மேற்கூறப்பட்ட அந்த மூன்று அமைப்புகளும் கூறின.

மரினா பே குரூஸ் சென்டருக்கு நேற்று காலை 7.35 மணிக்கு அந்த உல்லாசக் கப்பல் வந்தது. அந்நிலையத்தின் வருகை, புறப்பாடு பகுதிகள் பொதுமக்களுக்கு மூடப்பட்டிருந்தன. மரினா பே குரூஸ் சென்டருக்கு நேற்று 'கோஸ்டா ஃபோர்ச்சுனா' உல்லாசக் கப்பலைத் தவிர்த்து வேறு எந்தக் கப்பலும் வரவில்லை என அறியப்படுகிறது.

அந்தக் கப்பலில் இருந்த பயணிகள் பிரான்ஸ், பெல்ஜியம், பிரிட்டன், ஆஸ்திரியா, ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்தவர்கள். அக்கப்பலில் இருந்தவர்களில் 266 பேர் ஜெர்மானியர்கள் என அறியப்படுகிறது.

கடந்த இரு வாரங்களில், 10க்கும் மேற்பட்ட உல்லாசக் கப்பல்கள் சிங்கப்பூருக்கு வந்தன. அவற்றிலிருந்து 5,000க்கும் அதிகமான பயணிகள் வெளியேறினர். 'கோஸ்டா ஃபோர்ச்சுனா' உல்லாசக் கப்பலுக்குத் துறைமுகமாக சிங்கப்பூர் விளங்குகிறது. கடந்த ஆண்டு டிசம்பரிலிருந்து அக்கப்பல் இங்கு 16 முறை வந்தது.