அமைச்சர் சண்முகம் மீது முட்டை வீச விரும்புவதாகப் பதிவிட்ட இளையருக்கு நிபந்தனை எச்சரிக்கை

2 mins read
bd6b2708-19e4-439d-8b31-617619f6cc75
கடந்த 2017ஆம் ஆண்டில் கஞ்சா வைத்திருந்தது, உட்கொண்டது, போதைப்பொருள் பயன்படுத்தத் தேவையான சாதனம் வைத்திருந்தது போன்ற குற்றங்களுக்காக 21 வயது  எட்மண்ட் ஸோங் சிங்கப்பூர் ஆயுதப்படை தடுப்பு முகாமில் 12 மாத தண்டனையை நிறைவு செய்தார். படம்: எட்மண்ட் ஸோங் -

சிங்கப்பூரின் சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் மீது முட்டையை வீச விரும்புவதாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஃபேஸ்புக் பதிவு ஒன்றில் குறிப்பிட்டிருந்த 21 வயது சிங்கப்பூர் இளையருக்கு 12 மாத நிபந்தனை எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளதாக போலிஸ் தெரிவித்தது.

அத்துடன், அந்தப் பதிவுக்கு பதில் பதிவாக, திரு சண்முகம் எங்கு இருப்பார் என்பதைக் குறிப்பிட்டு பதிவிட்ட 48 வயது சிங்கப்பூர் ஆடவருக்கும் அறிவுறுத்து கடிதம் வழங்கப்பட்டிருப்பதாக போலிஸ் இன்று வெளியிட்ட ஊடகச் செய்தியில் குறிப்பிட்டது.

கடந்த 2017ஆம் ஆண்டில் கஞ்சா வைத்திருந்தது, உட்கொண்டது, போதைப்பொருள் பயன்படுத்தத் தேவையான சாதனம் வைத்திருந்தது போன்ற குற்றங்களுக்காக 21 வயது எட்மண்ட் ஸோங் சிங்கப்பூர் ஆயுதப்படை தடுப்பு முகாமில் 12 மாத தண்டனையை நிறைவு செய்தார்.

ஃபேஸ்புக் பதிவு தொடர்பிலான விசாரணை கடந்த ஆண்டு நடந்துகொண்டிருந்தபோது, மனோவியல் கோளாறு விளைவிக்கும் பொருளை உபயோகித்ததன் தொடர்பில் கூடுதல் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களைப் புரிந்தார்.

அவர் மீதான அண்மைய குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர் மூன்றாண்டுகள் சிறைத் தண்டனையை இப்போது அனுபவித்து வருகிறார்.

அச்சுறுத்தல்களைக் கடுமையாகக் கருதுவதாகக் குறிப்பிட்ட போலிசார், 2018ஆம் ஆண்டில் குடிமக்கள் சந்திப்பு நிகழ்வின்போது ஜூரோங் குழுத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுள் ஒருவரான டாக்டர் டான் வு மெங்கை போதைப்பொருள் புழங்கி ஒருவர் தாக்கியதை நினைவுகூர்ந்தனர்.

டாக்டர் டானை பிடித்து இழுத்து அவரது தலை, முதுகை சுவரில் மோதி, அவரை மண்டியிடச் செய்து நிலத்தில் தள்ளி, உதைத்து, அடித்தார் அந்த ஆடவர்.

பின்னர் கைது செய்யப்பட்ட அந்த ஆடவருக்கு மூன்று மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

#சிங்கப்பூர் #சண்முகம் #சட்ட அமைச்சர்